முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை, சென்னை மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரன் சரண்டர். !

சென்னை

முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை, சென்னை மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரன் சரண்டர். !

சென்னையில் மாணவர் நிதின்சாய் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பேரன் சந்துருவை திமுக கவுன்சிலரான சென்னை கே.கே.நகர் தனசேகரன் போலீசில் சரணடைய வைத்துள்ளார்.

இதனையடுத்து நிதின்சாய் கொலை வழக்கில் சந்துருவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியில் சொகுசு கார் மோதி நிதின்சாய் என்ற மாணவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் காதல் தகராறில்தான் நிதின்சாய், கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது உறுதியானது.

அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது காரை ஏற்றி கொலை செய்தவர்களில் சென்னை கே.கே.நகரை சேர்ந்த சந்துருவும் ஒருவர் என தெரியவந்தது.

சென்னை திமுக பிரமுகர்களில் ஒருவரும் மாநகராட்சி கவுன்சிலருமான கே.கே.நகர் தனசேகரனின் மகள் வழி பேரன்தான் சந்துரு. இந்த சந்துருவைத்தான் தமது அரசியல் வாரிசாக கே.கே.நகர் தனசேகரன் உருவாக்கியும் வருகிறார்.

திருமங்கலத்தில் சொகுசு கார் ஏற்றி மாணவர் நிதின்சாயை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான நிலையில் திடீரென போலீசில் சரணடைந்தார் சந்துரு. தற்போது சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

தலைமறைவான சந்துரு திடீரென சரண்டரானது குறித்து விசாரித்த போது, இந்த தகவல் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக, சந்துருவை போலீசில் சரணடைய வைக்க வேண்டும்; இல்லை எனில் கேகே நகர் தனசேகரன் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் என கடும் எச்சரிக்கை விடுத்தாராம். இந்த எச்சரிக்கையால்தான் பதறிப் போன கேகே நகர் தனசேகரன், பேரன் சந்துருவை உடனடியாக போலீசில் சரணடைய வைத்தார் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.