அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம் மழை வெள்ள பாதிப்பு, குழந்தைகள் உட்பட 67 பேர் உயிரிழப்பு. !
அமெரிக்கா

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பருவ மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.
இதில் 21 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், டெக்சாஸ் வெள்ளம் இதுவரை கண்டிராத பேரழிவு என வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
அமெரிக்காவின் தெற்கு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் புயலும் வீசி வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
குறிப்பாக குவாடாலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நகரத்தில் புகுந்த நிலையில் பலர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 கடந்து இருக்கிறது. தற்போது 67 பேர் வெள்ளத்தால் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் டெக்சாஸில் கோடைகால முகாமுக்கு சென்றிருந்த 700 மாணவிகளின், இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகள் மாயமாகியுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வெள்ளத்தால் பொதுமக்கள் எங்காவது சிக்கி இருக்கிறார்களா என ஹெலிகாப்டர்கள் படகுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேர் கவுண்டி பகுதியில் மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட ஷெரிப் லாரி லெய்தா தெரிவித்துள்ளார். அந்த எண்ணிக்கையில் 21 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கேம்ப் மிஸ்டிக்முகாமில் இருந்த 11 சிறுமிகள் மற்றும் ஒரு ஆலோசகர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர்.
மிகக் குறைவாகவே மழை பெய்யும் என வானிலை அறிவிப்புகள் இருந்தபோதும், வெள்ளத்தின் போது ஒரு சில மணி நேரத்தில் 15 இஞ்ச் அளவுக்கு மழை பெய்தது. பேய் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையை உடைத்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. பலர் மரங்களில் ஏறி உயிர் காக்க போராடிய நிலையில், இதுவரை 850க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாக மக்கள் பெரும் சோகத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரிடர் அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.
தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் முகமை (FEMA) மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, வானிலை மையம் (NOAA) மற்றும் தேசிய வானிலை சேவை துறையில், பணியாளர் குறைபாடு காரணமாகவே இந்த பெரும் வெள்ளத்திற்கான எச்சரிக்கை சரியாக அளிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் NOAA இயக்குநர் ரிக் ஸ்பின்ராட், "வானிலை சேவையில் பணியாளர் குறைவால் முன்னெச்சரிக்கை தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது," என தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் கேம்ப் மிஸ்டிக் பகுதியில் ஏற்பட்ட சேதம் கண்களில் கண்ணீர் வரவைக்கும் வகையில் உள்ளது. பல வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த ஒட்டுமொத்த கிராமமே துயரத்தில் மூழ்கி விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மழை தொடரும் அபாயமும் உள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.