வெனிசுலா அதிபர் மதுரோ யார் ? இவரது பின்னணி என்ன? சாதாரண பேருந்து ஓட்டுநர் அதிபர் ஆனது எப்படி? ??

வெனிசுலா

வெனிசுலா அதிபர் மதுரோ  யார் ? இவரது பின்னணி என்ன? சாதாரண பேருந்து ஓட்டுநர் அதிபர் ஆனது எப்படி? ??

1962 நவம்பர் 23ம் தேதி அங்கிருந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. 1990களின் தொடக்கத்தில் பேருந்து ஓட்டுநராக மதுரோ பணிபுரிந்தார்.

அப்போது 1992ல் நடந்த ராணுவ அதிகாரி ஹியூகோ சாவேஸ் ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில் முடிந்த நிலையில் சாவேஸ் சிறையில் வைக்கப்பட்டார்.

சரியாக அந்தக் காலகட்டத்தில் தான் மதுரோ சாவேஸின் இடதுசாரி திட்டத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குச் சிறையில் தள்ளப்பட்ட சாவேஸை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார்.

1998ல் சாவேஸ் அதிபரான நிலையில், மதுரோ அரசியலில் நுழைந்தார். தேசிய சட்டமன்றத் தலைவர், பின் வெளியுறவு அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தார்..

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி சர்வதேச கூட்டணிகளை உருவாக்கத் தீவி ராக முயன்றார்.. சாவேஸின் விருப்பத்திற்குரிய தலைவராக மதுரோ மாறினார். இதன் காரணமாகவே உயிரிழப்பதற்கு முன்பே, மதுரோவை தனது வாரிசாகப் பகிரங்கமாக அறிவித்தார் சாவேஸ்.

பல்வேறு புகார்கள்

சாவேஸின் மறைவுக்குப் பிறகு, 2013ல் மதுரோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வென்றார்.. இருப்பினும், மதுரோ ஆட்சி அவ்வளவு ஒன்றும் சிறப்பானதாக இல்லை. அவரது ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் உச்சம் தொட்டது. உணவு-மருந்துப் பற்றாக்குறை அதிகரித்தது..

இதனால் அதிகளவில் மக்கள் வெனிசுலாவில் இருந்து வெளியேறினர். 2014, 2017 ஆண்டுகளில் நடந்த போராட்டங்களை மிகக் கடுமையாக ஒடுக்கினார். மேலும், அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

புகார்கள்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மதுரோ அரசின் மீது கடுமையான தடைகளை விதித்தன. ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கு மத்தியில் தான் 2024 தேர்தல் நடத்தப்பட்டது. 2025ல் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார். அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழுவும் கூட, வெனிசுலா போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

நோபல் பரிசும் சர்வதேச கவனமும்

இந்தச் சூழலில் தான் கடந்த 2025க்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது வெனிசுலா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்த சர்வதேச கவனத்தைப் பெற்றன. மதுரோவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மச்சாடோவின் போராட்டத்திற்கு அங்கீகாரமாக அமைந்தது. நோபல் பரிசுக்குப் பிறகு எழுந்த சர்வதேச கவனமும் அழுத்தமுமே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது.