பெரம்பலூரில் மான் கறி எனக் கூறி நாய்க்கறி விற்ற கும்பல் கைது. !

தமிழகம்

பெரம்பலூரில் மான் கறி எனக் கூறி நாய்க்கறி விற்ற கும்பல் கைது. !

மட்டன் என்ற பெயரில் நாய்க்கறி, பூனைக்கறி, காக்கா பிரியாணி என்று சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த தகவலின்பேரில் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று உடனுக்குடன் ஆய்வு நடத்தி, நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்றினை பெரம்பலூரில் கைது செய்துள்ளனர்.. என்ன நடந்தது?

கடந்த வருடம் சென்னையில் பூனைக்கறி விற்பதாக தகவல்கள் பரவின.. அதாவது, பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களிலும், அங்குள்ள சாலையோர கடைகளிலும் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு பூனைக்கறி விற்கப்பட்டது.. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வேலூரில் நாய்க்கறி

அதேபோல, சமீபத்தில்கூட, வேலூரில் நாய்க்கறி விற்பதாக திடீர் குற்றச்சாட்டுகள் கிளம்பின.. எஸ்.எல். புதூர் பகுதியில் மஞ்சுளா என்பவரின் கட்டிடத்தில், நாய்கள் பராமரிப்பு மையம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.. இங்கு நாய்களுக்கு சிகிச்சையுடன், கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. எனினும், நாய்களை வெட்டி கறி விற்கப்படுவதாகவும் பொதுமக்களிடமே சந்தேகம் கிளம்பியது.

இதையடுத்து, அந்த பராமரிப்பு மையத்தை காலி செய்ய வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தது நினைவிருக்கலாம்.. இப்படி பூனை, நாய்களுக்கு மத்தியில், காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடி அவைகளையும் மலிவுவிலை இறைச்சிக்காக சிலர் பயன்படுத்தி வருவதும் தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கிறது.

வவ்வால் கறி - சில்லி சிக்கன்

கடந்த மாதம், சேலம் மாவட்டம் ஓமலூரில் வவ்வால் வேட்டையும் நடந்துள்ளது...தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்கு தகவல் கிடைக்கவும், அதிகாரிகளும் ரோந்து மேற்கொண்டிருக்கிறார்கள்..

அப்போதுதான் கமல் மற்றும் செல்வம் என்ற 2 பேரை பிடித்து விசாரித்தால், காட்டுக்குள் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, அவற்றை சமைத்து, மாலை நேர சில்லி சிக்கன் என்று சொல்லி பொதுமக்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. சில்லி சிக்கன் என்று சொல்லி விற்கப்பட்ட வவ்வால் கறியை எத்தனை பேர் இதுவரை சாப்பிட்டார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், இந்த சம்பவம் கடந்த மாதம் சேலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.

பை நிறைய காட்டுப்பன்றி கறி

இந்நிலையில், நேற்றைய தினம் பெரம்பலூரில் மான் கறி எனக்கூறி நாய்க்கறி விற்பனை செய்ததாக, 3 பேரை, வனத்துறையினர் கைது செய்துள்ளனர்... வேப்பந்தட்டை வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகளில், மான்களையும், காட்டு பன்றிகளையும் ஒரு கும்பல் வேட்டையாடுவதாக, மாவட்ட வன அலுவலர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காட்டு கொட்டகையில் தீவிரமான சோதனை செய்யப்பட்டபோது, அலெக்சாண்டர், தனசிங், ஜான் ஜோசப் ஆகியோர் மீது சந்தேகம் கிளம்பியது.. அவர்களிடம் விசாரித்தபோது, வேட்டை நாய்களை கொண்டு, வனப்பகுதிகளில் 2 புள்ளி மான்கள் மற்றும் ஒரு காட்டு பன்றியை வேட்டையாடி, இறைச்சியாக்கி விற்பனைக்கு வைத்திருந்தது அம்பலமானது..

இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், பை நிறைய வைத்திருந்த மான் கறியையும், அவைகளை விற்பதற்காக உபயோகப்படுத்திய 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேர் மீதும் வழக்கு பதிந்த வனத்துறையினர், தலா 1.50 லட்சம் வீதம், 4.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மான்கறிக்கு பதிலாக நாய்க்கறி

இதுகுறித்து வனத்துறையினர் சொல்லும்போது, திருவிழா காலங்களில் சம்பந்தப்பட்டட 3 பேரும் சேர்ந்து, வனப்பகுதியில் மான்களை, காட்டு பன்றிகளை வேட்டையாடியிருக்கிறார்கள்.. அசைவ பிரியர்களுக்கு இந்த இறைச்சியை விற்றுள்ளார்கள்.. மான் கறி கிலோ 350 முதல் 600 ரூபாய் வரையிலும், காட்டுப்பன்றி கறி கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்துள்ளனர்.

வேட்டையில் வன விலங்குகள் எதுவும் சிக்காவிட்டால், தெரு நாய்களை அடித்துக் கொன்று, மான் கறி என்று கூறி விற்றும் வந்துள்ளனர்.. இது தெரியாமல் பலபேர் நீண்ட நாட்களாகவே, மான்கறி என்று நினைத்து நாய்க்கறியை சாப்பிட்டு வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.