தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்கு குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே நடைபெற்ற விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் விளைநிலங்களை நாசம் செய்யும், காட்டு யானை மற்றும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள வீ.மாதேப்பள்ளி கிராமத்தில் தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்கு குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் சார்பில் பச்சை மற்றும் சிவப்புநிற கதர் ஆடைகள் அணிவித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்தக் கூட்டத்திற்கு கட்டுமான சங்கத்தின் ஒன்றிய தலைவர் முனிஎல்லப்பா, ஒட்டுநர் அணி ஒன்றிய தலைவர் முகமது உமர், முத்துராஜ்
ஒன்றிய துணை செயலாளர் வெங்கட்டன், மகளீர் அணித் தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் வேப்பனஹள்ளி பகுதிகளில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பெற கிராம அலுவலரின் கையெழுத்து வாங்க முடியாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும், வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்,
யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை 20 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், குறிப்பாக வேப்பனஹள்ளி, பன்றிகுறி, தீர்த்தம், மகராஜாகடை, நாச்சிகுப்பம் நெடுசாலை என பல்வேறு பகுதிகளில் உலா வரும் காட்டுப்பன்றி மற்றும் யானைகளால் நிலக்கடலை, ராகி, நெல், வாழை உள்ளிட்ட எந்தப்பயிர்களும் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், இந்த வன விலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மிகவும் பின்தங்கி உள்ள விவசாயிகளை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னபையன், கட்டுமான அணி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், கட்டுமான அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தச்சு வேலை மாவட்ட தலைவர் முனியாண்டி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ