13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறிய நீதி மன்றம்.! விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியனை கைது செய்த போலீசார்.!

பி ஆர் பாண்டியன்

13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறிய நீதி மன்றம்.! விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியனை கைது செய்த போலீசார்.!

திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து அவரை வீட்டில் இருந்து போலீசார் அழைத்து சென்ற போது கூடவே வந்த நபர் செய்த செயலால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து போலீசார் அவரை அமைதியாக இருக்குமாறு கூறி அழைத்து சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவராகவும் இருந்து வருகிறார். விவசாயிகள் நலன் சார்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக பி ஆர் பாண்டியன் உள்பட விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணியினை மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக போராடிய போது பிஆர் பாண்டியன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து பி ஆர் பாண்டியன் உள்பட பலர் மீது பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் இவர் ஜாமீனில் வெளிவந்தார். எனினும் வழக்கானது திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு விரைந்த போலீசார் பி ஆர் பாண்டியனை அழைத்து வந்தனர். வீட்டுக்குள் சென்ற போலீசார் அவரை வீட்டின் வெளியில் நின்ற வேனிற்கு அழைத்து வந்த போது உடன் அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த அவரது ஆதரவாளர் ஒருவர் திடீரென கோஷம் எழுப்பினார்.

நீதி எங்கே.. நீதி எங்கே.. என வீட்டை விட்டு வெளியே வந்ததும் கோஷம் எழுப்பினார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்ப தொடங்கினர். ஓன்.என்.ஜிசிக்கு எதிராக போராடியது ஒரு குற்றமா? என ஆவேசமாக பேச ஆரம்பித்தார். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. எனினும் சக போலீசார் அவரது வாயை பொத்தி அங்கிருந்து அவரை தனியாக அழைத்து சென்றனர். இதையடுத்து பி ஆர் பாண்டியன் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.