நடுக்கடலில் சிறை வைத்தது போல் 650 கப்பல்கள்..! இனி ஒரு சொட்டு எண்ணெய் கூட கிடைக்காது. அமெரிக்காவால் பெரும் பீதி..!
ஈரான் Vs அமெரிக்கா
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுமையாக மூட அமெரிக்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் உலக நாடுகளின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஓமன் வளைகுடாவில் தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் கப்பல்களைக் குவித்துள்ளது. இது குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "எந்தச் சூழலிலும் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக ஈரான் பணம் சம்பாதிப்பதை அனுமதிக்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை, ஈரான் தனக்கு இணக்கமான நாடுகளின் கப்பல்களிடம் மட்டும் சுங்கக் கட்டணம் வசூலித்து அனுமதித்து வந்தது. ஆனால், அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கையால் ஹார்முஸ் நீர்ச்சந்தி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதால், கடந்த 45 நாட்களாக 650-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றன.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பங்கேற்ற இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போர் பதற்றத்தைத் தணிக்க நான்கு முக்கிய நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. அதன்படி அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் ஆலோனை நடத்தினார். ட்ரம்ப் மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்புடனும் புதின் நல்லுறவில் இருப்பதால், ரஷ்யாவின் தலையீடு இந்தப் பிரச்சினையில் தீர்வைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிதான், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கா முன்வைத்த திட்டங்களுக்கு ஈரான் பதிலளித்தால், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்பது துருக்கியின் திட்டம். கடந்த 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதர்கள் வாஷிங்டனில் நேரடியாகப் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அது மறைமுகமாக ஈரான் - அமெரிக்கா இடையிலான உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதற்காக பிரிட்டன் மற்றும் இதர நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பிடிவாதமாக இருப்பதால், ஒரு சர்வதேச ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இயல்பு நிலை திரும்புவது கடினம் என்றே தெரிகிறது.
