தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்; சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க ஆளுநரிடம் அதிமுக மனு. !

அதிமுக Vs திமுக

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்; சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க ஆளுநரிடம் அதிமுக மனு. !

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி அவரை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமித்ஷா பா.ஜ.க-விற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை காலை 11 மணிக்கு சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இவருடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் தி.மு.க அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை, இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். பல்வேறு துறைகளில் அடிக்கப்பட்ட ஊழல்களுக்கு ஆதரம் உள்ளதால் முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.

தமிழக சட்டசபை வரும் 20-ஆம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகம் வந்த அமித்ஷாவை எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசிய நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

எடப்பாடி அளித்த ஊழல் பட்டியல்

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் முறை - 64,000 கோடி
  • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை - 60,000 கோடி
  • சுரங்கம் மற்றும் கனிம வளத் துறை - 60,000 கோடி
  • எரிசக்தித் துறை - 55,000 கோடி
  • கலால் வரி - 50,000 கோடி
  • பத்திரப்பதிவுத் துறை - 20,000 கோடி
  • நெடுஞ்சாலை துறை - 20,000 கோடி
  • நீர் ஆதாரத் துறை - 17,000 கோடி
  • சென்னை மாநகராட்சி - 10,000 கோடி
  • தொழிற்துறை - 8,000 கோடி
  • பள்ளிக் கல்வித்துறை - 5,000 கோடி
  • மக்கள் நல்வாழ்வுத் துறை - 5,000 கோடி
  • வேளாண்மைத் துறை - 5,000 கோடி
  • சமூக நலத்துறை - 4,000 கோடி
  • உயர் கல்வித் துறை - 1,500 கோடி
  • இந்து சமய அறநிலையத்துறை - 1,000 கோடி
  • ஆதி திராவிடர் நலன் துறை - 1,000 கோடி
  • சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை - 750 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை - 500 கோடி
  • சிறைத்து துறை - 500 கோடி
  • சுற்றுலாத்துறை - 250 கோடி
  • பால் வளத்துறை - 20 கோடி