அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் ஆளுமைத்திறன் மேம்பாடு குறித்து கருத்தரங்கம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் ஆளுமைத்திறன் மேம்பாடு குறித்து கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஆங்கிலத்துறை தலைவர் கல்பனா வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பயின்ற முன்னாள் ஆங்கிலத்துறை மாணவியும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேமலதா ராகேஷ் அவர்கள் ஆளுமைத்திறன் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஒரு பெண் தங்களுடைய வாழ்க்கையின் எந்த சூழலிலும் கல்வியையோ, தங்களுடைய வேலையையோ யாருக்காகவும் கைவிடக்கூடிய சூழல் இருக்கக் கூடாது. ஒரு பெண்ணுக்கு கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கட்டிய கணவன் கைவிட்டாலும் ஒரு பெண்ணுக்கு அவள் கற்ற கல்வி என்றைக்கும் அவளை கைவிடாது.
வாழ்வில் எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்றால் இலக்கு என்ன என்பதை முன்னிறுத்த வேண்டும். ஒவ்வொரு இலக்கையும் சிறிய இலக்கு, நீண்ட கால இலக்கு என்பதை முன்னிறுத்தி இலக்கை நோக்கி பயணித்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் எந்த செயல்களுக்கும் எப்போதும் யாராவது ஒருவர் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள்.
அதையெல்லாம் நாம் காது கொடுத்து கேட்கக் கூடாது. நம்முடைய இலக்கை நோக்கி நம்முடைய தொடர் உழைப்பு, முயற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வந்தால் நாம் வாழ்க்கையில் வெற்றி அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
நிகழ்ச்சியின் கணித உதவிப் பேராசிரியர் பரமகுரு நன்றி கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ