அமெரிக்கா டூ விருதுநகர்.. மூளைச்சலவையில் செய்த முட்டாள் தனம்..கம்பி எண்ணும் விருதுநகர் தம்பதி.!
சென்னை

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 29 வயதாகும் சல்மான் சலீம் என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வரும் இவரிடம் வெளிநாட்டில் உள்ள 'சைபர்' மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறி, ரூ.17 லட்சம் பெற்று மோசடி செய்தது. இதுகுறித்து அவர், சென்னை மேற்குமண்டல 'சைபர் கிரைம்' போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சல்மான் சலீம் அனுப்பிய பணம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 35 வயதாகும் புஷ்பா மற்றும் அவரது கணவர் சதுரகிரியின் (41) வங்கி கணக்குகளுக்கு சென்றிருந்ததும், அந்த பணத்தை அவர்கள் காசோலை மூலம் எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் விருதுநகர் சென்று கணவன்-மனைவியை கைது செய்தனர்.
விசாரணையில் போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்தது. அதன் படி, 'பேஸ்புக்' மூலம் புஷ்பாவை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் ஓட்டோ என்ற நபர் தொடர்பு கொண்டிருககிறார்.. அவர், உங்களுக்கு பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்பி வைக்கிறேன். நான் சொல்லும்படி நடந்துக்கொள்ளுங்கள் என்று கூறி 'சைபர்' மோசடி திட்டத்தை கூறியிருக்கிறார்.
வங்கி கணக்கு
கணவர் அனுமதி கொடுத்துள்ளார். அதன்பின்னர் புஷ்பா இந்த திட்டத்தில் இணைந்துள்ளார். அமெரிக்க நபர் கூறிய ஆலோசனையின் பேரில் 3 வங்கி கணக்குகளை புஷ்பா மற்றும் சதுரகிரி தொடங்கி உள்ளனர். மோசடி செயல் மூலம் அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் பணத்தை எடுத்து, கிறிஸ் ஓட்டோ அனுப்ப கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படி, தங்கள் வங்கி கணக்குக்கு சல்மான் சலீம் அனுப்பிய ரூ.17 லட்சத்தில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை சேர்ந்தவருக்கு விருதுநகரை சேர்ந்த தம்பதி ஏஜெண்டாக செயல்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மூளைச்சலவை
விருதுநகரில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல்வேறு ஏழைகளை இப்படி மூளைச்சலவை செய்து சைபர் கிரைம் கும்பல் வெளிநாட்டில் இருந்த படி, பணத்தை பறிக்கிறார்கள். மாட்டினால் ஏஜெண்டாக செயல்படும் கும்பல் மட்டுமே பிடிப்படுகிறார்கள். மெயின் திருடர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை பிடிப்பதில் சவால் நிலவுகிறது.