மதுபோதையில் அதிவேகமாக இயக்கிய காரை விரட்டிச் சென்ற காவலர் விபத்தில் பலியான சோகம். !

சென்னை

மதுபோதையில் அதிவேகமாக இயக்கிய காரை விரட்டிச் சென்ற காவலர் விபத்தில் பலியான சோகம். !

மடிப்பாக்கத்தில் மதுபோதையில் அதிவேகமாக இயக்கிய காரை விரட்டிச் சென்ற போக்குவரத்து காவலர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சீதனஞ்சேரியை சேர்ந்தவர் மேகநாதன்(35), இவர் கடந்த 2011ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி, தற்போது மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். 

நேற்றிரவு மடிப்பாக்கம் எல்.ஐ.சி.நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற கார் ஒன்று அதிவேகமாக சென்றதால் ஒட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதை அறிந்து அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு காவலர் மேகநாதன் அந்த காரை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டார். 

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் மோதி காருக்கு அடியில் சிக்கி 20 அடி தூரம் இழுத்துச் சென்றதில் பலத்த காயமடைந்தார். 

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது.

பின்னர் அவ்வழியே சென்ற ரோந்து போலீஸார் மேகநாதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்தார். 

அதன் பின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் ஒருவர் நான் தான் விபத்தை ஏற்டுத்தியது என கூறியுள்ளார். உடனடியாக பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சென்று காரை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் கீழ்கட்டளையை சேர்ந்த சாய்ராம்(32), என்பதும் கிழக்கு கடற்கரை சாலைக்கு மனைவி மற்றும் மகளுடன் சென்று விட்டு வீடு திரும்பிய போது மதுபோதையில் இருந்ததால் போலீஸாரை கண்டதும் பதற்றமடைந்து நிற்காமல் சென்றதாகவும், பின்னர் மனைவி மற்றும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு தகவல் தெரிவித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மதுபோதையால் ஏற்பட்ட விபத்தினால் காவலரின் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஆதரவின்றி நிற்கின்றனர்.

பணிக்கு சென்ற அப்பா வீடு திரும்புவார் என ஆவலோடு காத்திருந்த குழந்தைகளுக்கு தந்தை இறந்து போன செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்

       S S K