புதிய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசுக்கான நிதிச்சுமை எகிறப்போகுது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் .!
ஓய்வூதியம்
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
TAPS ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
அதேபோல் 50 சதவிகித ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். அதேபோல் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது பணிக் காலத்தில் இறக்க நேரிடும் போதும் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை அளிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாக்டோ கியோ, போட்டா ஜியோ அமைப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 2003ல் ஜெயலலிதா ஆட்சியின் போது அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்காக போராடி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், 2004ல் பழைய ஓய்வூதியத்திற்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்காது என்ற நிலை வந்தது. அதன்பின் கடைசி சம்பளத்தை அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற முறை கொண்டு வரப்பட்டது. பின்னர் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம் கொண்டு வரப்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத நிலை வந்தது.
20 ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் வந்தன. தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60ஆக மாற்றி இருக்கிறோம். வரும் காலங்களில் 63ஆக உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த உயர்வு கொண்டு வரப்பட்டால், தமிழக அரசுக்கு உடனடியாக பெரியளவில் நிதிச்சுமை ஏற்படாது. அதனை மனதில் வைத்துதான் அரசு ஊழியர்கள் அமைப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும், மிகப்பெரிய போராட்டத்தை யாருக்கும் எந்த வருத்தமும் ஏற்படாத வகையில் முதல்வர் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரத்தில் புதிய சுமைகள்.. அதாவது புதிய நிதி ஆதாரம் பற்றி ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை சரியாக கொடுத்தால், தமிழக அரசுக்கு பெரியளவில் நிதிச்சுமை ஏற்படாது.
அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள். 1960களில் இருந்தே இதே நடைமுறைதான். அவர்கள்தான் வாக்குச்சாவடியில் பணியாற்றுவார்கள். அரசு ஊழியர்கள் அதிருப்தியோடு இருந்தால், அரசும் சிறப்பாக செயல்பட முடியாது. நிதிச்சுமை அதிகம்தான். ஏனென்றால் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை பொருளாதார நிபுணர்கள்தான் அலச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
