போலீசார் ஜோடித்து பொய் வழக்கு போட்டதாக கூறி 230 கி கஞ்சா வழக்கில் 4 பேரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம். !
சிறப்பு நீதிமன்றம்

பறிமுதல் செய்ததைவிட கூடுதலாக 6 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைத்ததால், 230 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி கும்மிடிப்பூண்டி போலீஸாருக் கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கவரப்பேட்டை பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரில் 230 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த மதுரையைச் சேர்ந்த அய்யர், அல்லி நகரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், எல்லீஸ் நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி, திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த எட்வின் ராஜ் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.
போலீஸார் மீது அதிருப்தி - விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கவரப்பேட்டை - சத்தியவேடு சந்திப்பில் சோதனை நடத்தியதாக கூறிய போலீஸார், கவரப்பேட்டை - மாடம்பாக்கம் சந்திப்பில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை பார்க்கும்போது போலீஸார் சம்பவ இடத்துக்குச் செல்லவில்லை என தெரிகிறது.
முதல் தகவல் அறிக்கையில் 230 கிலோ கஞ்சா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் 236 கிலோ 580 கிராம் கஞ்சாவை ஒப்படைத் துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கார் யாருக்குச் சொந்தமானது என நிரூபிக்கவில்லை. இவ்வாறு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.