தென்காசியில் பட்ட பகலில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை.!.

தென்காசி

தென்காசியில் பட்ட பகலில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை.!.

தென்காசியில் பட்ட பகலில் அரசு வழக்கறிஞர் வெட்டிக்கொலை. 

வழக்கறிஞர்கள் சாலை மறியல்

தென்காசி, டிச - 03

தென்காசி நகரின் மையப் பகுதியில் பட்டப் பகலில் அரசு வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தென்காசி வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்பி அரவிந்த் குற்றவாளியை  உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் ஊர்மேலழகியான்  கிராமம் ஏ.ஆர்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த குழந்தைவேலு என்பவரின் மகன் கே.முத்துக்குமாரசாமி (வயது 46) இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.

தென்காசி நகரப் பகுதியில் உள்ள நடுபல்க் சிக்னல் அருகே  உள்ள அவரது அலுவலகத்தில் இன்று  மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற தென்காசி போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தென்காசி நீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள்  குற்றவாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தி தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இந்த ,சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த குற்றவாளியான ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 மேலும், சிவசுப்பிரமணியனும், அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி இருவரும் உறவினர்கள் என்பதால், இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருக்கலாம் என கூறப்படும் நிலையில்,  முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதும், குற்றவாளியை கைது செய்த பிறகே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன் செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் அப்துல் காதர், மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
.கிருஷ்ண முரளி(எ) குட்டியப்பா, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் மாவட்ட கழக அவைத்தலைவர் வி.பி. மூர்த்தி, வழக்கறிஞர் கார்த்திக் குமார், வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை பாண்டியன் வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

கொலை செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமிக்கு ராஜாத்தி (வயது 43) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்