தமிழகத்தின் ஒரே தீவிரவாதி ஆளுநர் தான்'... அப்பாவு சர்ச்சை பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்.!

அண்ணாமலை

தமிழகத்தின் ஒரே தீவிரவாதி ஆளுநர் தான்'... அப்பாவு சர்ச்சை பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்.!

ஆளுநர் ஆர்.என். ரவி கூறியது என்ன?

தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, 'தமிழகத்தில் பட்டியலின மக்கள் காலணி அணிந்து, சில தெருக்கள் வழியாக செல்லும்போது தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஒரு பள்ளியில் தலித்துகளை தனிமைபடுத்த சிறிய சுவர் எழுப்பி உள்ளனர். நான் அந்தப் பள்ளிக்கு வருகிறேன் என்றதும் அந்த சுவர்கள் அவசர அவசரமாக இடித்து தள்ளப்பட்டன. தமிழக மக்கள் சனாதன சிந்தனைகளில் திளைத்தவர்கள். நமது நாட்டின் அடித்தளம் சனாதனம்தான்' என்று தெரிவத்தார்.

சபாநாயகர் அப்பாவுவின் சர்ச்சை பதில்

ஆளுநரின் கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பாதுகாப்பற்ற மாநிலம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வருகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான். இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் இல்லை. தீவிரவாதம் வந்துவிடாதா என்று விரும்புகிறார் ஆளுநர் என்று கூறினார். மேலும் தமிழகத்தின் ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான் என அப்பாவு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை கடும் கண்டனம்

இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் கீழ் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியதற்காக, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி "தீவிரவாதி" என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.

2022-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த கொடூரமான தற்கொலை குண்டுவெடிப்பை அப்பாவு மறந்துவிட்டாரா? பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய தீவிரவாத அமைப்புகளின் மீதான ஒடுக்குமுறை குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) வெளியிட்ட செய்திகளை அவர் எப்போதாவது சரிபார்த்தாரா? எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யத் தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டு வரும் வேளையில், 1998 கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, அதிர்ச்சியூட்டும் வகையில் தியாகியைப் போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.