சாட்சியான உள்ளாடை, 48 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிரஜ்வல் ரேவண்ணா, ஆயுள் தண்டனை கிடைத்தது எப்படி?
கர்நாடகா

பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகனும், ஹாசன் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடை (Pettikoat)தான் முக்கிய ஆதாரமாக மாறி பிரஜ்வல் ரேவண்ணாவை சிக்க வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடகாவை சேர்ந்தவர். ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இவரது பேரன் பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பியாக இருந்தார். தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் தான் இந்த பிரஜ்வல் ரேவண்ணா. இவருக்கு வயது 34.
கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான குமாரசாமி, தேவகவுடாவின் இன்னொரு மகன் ஆவார். இதனால் குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சித்தப்பா ஆவார். இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார புகார் எழுந்தது.
சிறப்பு விசாரணை குழு
இவர் தனது எம்பி பதவியை பயன்படுத்தியும், கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தியும் பெண்களுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 4,000 ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் லீக்காகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். புகார் கிளம்பிய பிறகு அவர் வெளிநாடு சென்றார். ஜெர்மனியில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் விமான நிலையத்தில் அவரை சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். பிரஜ்வல் ரேவண்ணா மீதான இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
4 பலாத்கார வழக்கு
மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது மொத்தம் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 48 வயது பெண் சார்ந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்தது. ஹாசன் மாவட்டம் கன்னிகடா பண்ணை வீட்டில் 48 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது அவரை மிரட்டி 2 முறை பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்துள்ளார். ஹாசனில் உள்ள பண்ணை வீடு மற்றும் ரேவண்ணாவுக்கு சொந்தமான பெங்களூரில் வீடுகளில் வைத்து 2021ல் 2 முறை பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்துள்ளார். அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
சாகும் வரை ஆயுள் தண்டனை
இந்த வழக்கு பெங்களூர் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1,632 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 113 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. நேற்று பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இன்று அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுதார்.
தண்டனைக்கு காரணம் இதுதான்
இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க முக்கிய காரணம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சேலையில் இருந்த ஆதாரம் தான். அதாவது வேலைக்கார பெண்ணை மிரட்டி உறவு வைத்த பிரஜ்வல் ரேவண்ணா அதனை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை எஸ்ஐடி அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முகம் தெரியவில்லை. பிறப்புறுப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகள் மட்டுமே தெரிந்தது. இருப்பினும், இந்த வீடியோவை வைத்து சிறப்பு விசாரணை குழுவினர் ஆதாரம் தேட முயன்றனர்.
முதற்கட்டமாக வீடியோவில் இருக்கும் வாய்ஸ், பிரஜ்வல் ரேவண்ணாவின் வாய்ஸ்சுடன் ஒத்துப்போனது. அதேபோல் வீடியோவில் இருந்த தளசெங்கலும், பெங்களூரில் உள்ள வீட்டின் தளசெங்கலும் ஒன்றாக இருந்தது. இது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிக்கலை கொடுத்தது. மேலும் அவரது உருவத்தை அடையாளம் காண துருக்கி, ஜப்பான் ஆய்வுகளின்படி மேற்கொள்ளப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் பிரஜ்வல் ரேவண்ணா என்பது உறுதி செய்யப்பட்டது. இது இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாறியது.