தோண்ட தோண்ட கிளம்பும் பூதாகரம், தர்மஸ்தலா விவகாரத்தில் கர்நாடகா அதிர்ச்சி. !

கர்நாடகா

தோண்ட தோண்ட கிளம்பும் பூதாகரம், தர்மஸ்தலா விவகாரத்தில் கர்நாடகா அதிர்ச்சி. !

பெங்களூர்: கர்நாடகாவில் தர்மஸ்தலா புதைகுழி விவகாரத்தில் தோண்டத் தோண்ட புதிய புதிய பூதங்கள் கிளம்பி வருகிறது.

இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தர்மஸ்தலா கிராமத்தில் நடந்த இளம் பெண்ணின் மர்ம மரணம் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா பகுதியில் உள்ள மஞ்சுநாதர் கோயில் உலகெங்கும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து இங்கு பக்தர்கள் வருவார்கள். கடந்த ஜூன் மாதம் இந்த கோயிலில் பணியாற்றிய தூய்மை பணியாளர் சில பகீர் புகாரை அளித்திருந்தார்.

தர்மஸ்தலா விவகாரம்

1995 முதல் 2014 வரை தூய்மை பணியாளராக வேலை செய்த அவர், இந்த 19 ஆண்டுகள் பல பெண்கள், மாணவிகளின் உடல்களைப் புதைத்ததாகத் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால் இதுபோல செய்ததாகவும் 13 இடங்களில் உடல்களைப் புதைத்ததாக அவர் கூறியிருந்தார். கர்நாடகாவையே அதிர வைத்த இந்தச் சம்பவம் குறித்த விசாரிக்க இப்போது சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குழு சில இடங்களில் பான் கார்டு, ஆதார் காட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஒரு இடத்தில் தலை இல்லாத மனித எலும்புக் கூடுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

திடீர் திருப்பம்

இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெல்தங்கடியில் சமூக ஆர்வலர் ஜயன் டி என்பவர் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி சில பகீர் புகாரை கொடுத்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தர்மஸ்தலா கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு இளம் பெண்ணின் மர்ம மரணம் குறித்துப் புகார் அளித்து, முக்கிய ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

தர்மஸ்தலா புதைகுழி வழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பெல்தங்கடியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்திற்கு இரவு சுமார் 7 மணியளவில் வந்த ஜயன் டி, 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இளம் பெண்ணின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து தனது புகாரைப் பதிவு செய்தார். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பகீர் வாக்குமூலம்

அங்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜயன், "நான் அந்தப் பெண்ணின் உடலை நேரில் பார்த்தேன். அது சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டது. தர்மஸ்தலா கிராமத்தில் அவளது உடல் புதைக்கப்பட்ட இடம் எனக்குத் தெரியும்.. அதற்கு நானே சாட்சி. இளம்பெண் புதைக்கப்பட்ட இடத்தை சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகளுக்குக் காட்டவும் ரெடியாக இருக்கிறேன் அந்தப் பெண் கொல்லப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரது உடல் சிதைந்திருந்தது" என்றார்.

1986இல் தர்மஸ்தலா கிராமத்தில் கொல்லப்பட்ட பத்மலதா என்ற பெண்ணின் உறவினரான ஐயன், அந்த பெண்ணின் மரணத்திற்கு அப்போது நீதி கிடைக்காமல் போனதாகச் சொல்கிறார். மேலும் அவர், "ஆனால், கர்நாடக அரசின் சிறப்பு விசாரணைக் குழு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வெளிப்படையான விசாரணை நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

பலர் புகாரளிப்பார்கள்

அதேநேரம் இதுபோன்ற மர்மமான மோசமான மரணங்கள் அங்குப் பலருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நிச்சயம் தானாக முன்வந்து புகார் அளிப்பார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். நாளை திங்கட்கிழமை இது குறித்து அனைத்து விவகாரங்களையும் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.