ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிலை சூளகிரி அருகே கண்டறியப்பட்டது .!
கிருஷ்ணகிரி

ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிலை சூளகிரி அருகே கண்டறியப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு அருகில் உள்ள துரை ஏரி கரையில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிலை பாதுகாப்பின்றி இருப்பதை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் துரை ஏரி கரை உள்ளது. இதன் அருகில் ஏரியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டரபாளையம்திற்கு போகும் வழியில் காய்ந்த மரம் ஒன்றில் முருகன் கற்சிலை இருப்பதாக சூளகிரியில் மளிகை கடை வைத்திருக்கும் திரு கண்ணன் என்பவர் தகவல் தெரிவித்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அறம்கிருஷ்ணன் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் இந்த இடத்தை பார்வையிட்ட பின் அவர்கள் தெரிவித்ததாவது...
ஒரு காலத்தில் பாளையத்து ஜமீன்கள் அதிகம் வசிக்கும் இடமாக பேரிகை இருந்துள்ளது. இன்றும் கூட பேரிகையில் ஜமீன்கள் வசித்த வீடுகள் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இவ்விடங்களும் உள்ளன.
ஆங்கிலேயே அரசிடமிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இவ்விடத்தில் உள்ள பலநூறு ஏக்கர் நிலங்கள் ஜமீன்தார்கள் வசம் இருந்துள்ளது.
தற்போது கூட இங்கு இருக்கும் நிலங்கள் பெங்களூரில் வசிக்கும் ஜமீன்தார்களின் வாரிசுகள் வசம் இருப்பதாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றார்கள், அதனால் தான் இந்த ஏரிக்கு துரைஏரி என்று இன்றும் அழைக்கப்படுகிறது. ஏரியின் மறுகரையில் உள்ள புதினா பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில் தான் இந்த இடம் உள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இவ்விடத்தில் சிறிய கல்மண்டபம் இருந்ததற்கான அடையாளங்கள் இன்னும் இருக்கின்றன. இதன் அருகிலேயே ஒரு குளமும் அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இவ்விடத்தில் பழங்காலத்தில் முருகன் கோயில் அல்லது சிவன் கோயில் இருந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. காய்ந்துபோன மரத்தின் வேர்களில் இந்த முருகன் கற்சிலை சிக்கி உள்ளது. இச்சிலையின் கைகளும் , கால்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.
மயிலின் முகம் மட்டும் மரத்தின் உட்பகுதியில் சிக்கியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ் நாட்டில் முருகன் வழிபாடு இருந்துள்ளது. இதற்கான ஆதாரமாக சென்னையிலிருந்து மகாபலிபுரம் போகும் சாலையில் சவளகுப்பம் என்ற இடத்தில் முருகன் ஆலயம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.
இங்கு இருக்கும் முருகன் கற்சிலையும் இதே காலகட்டத்தை சேர்ந்த மயில் மேல் முருகன் அமர்ந்த நிலையில் உள்ள கற்சிலை அருகில் உள்ள அத்திமுகம் ஐராவதீஸ்வரர் சிவன் கோயிலிலும் உள்ளன. இந்தக் கற்சிலை 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது . 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு செய்யப்படும் முருகன் கற்சிலைகள் அதிகமாக மயிலின் முகம் இடது பக்கம் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் . அதற்கு பிறகான காலங்களில் உருவாக்கப்படும் முருகன் சிலைகள் மயிலின் முகம் வலதுபக்கம் பார்க்கும்படி இருப்பதை பார்க்கலாம்.
மயில் வாகனத்தின் மீதிருக்கும் முருகன் கற்சிலை புகைபடத்தை கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தின் முன்னால் காப்பாட்சியர் திரு. கோவிந்தராஜ் அவர்களிடம் காண்பித்து கருத்து கேட்க்கப்பட்டது. தற்போது எந்தவகையான பாதுகாப்பின்றி இருக்கும் இந்த கற்சிலையை இங்கு வசிக்கும் பொதுமக்கள் எடுத்து வைத்து வழிபட வேண்டும். இல்லையென்றால் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் இப்படியான காலத்தில் முத்திய கற்சிலைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகமும் , கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் இதற்கான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என இவ்வூர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விடத்திற்கு அழைத்து சென்ற திரு கண்ணன், திரு ஜனார்த்தனன், சின்னப்பன், சேரன் முனிராஜ், மாரப்பா, மஞ்சுநாத் ஆகியோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
என அறம் கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ