தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பா.ஜ.க பங்கு பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு. !

அ.தி.மு.க - பா.ஜ.க.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பா.ஜ.க பங்கு பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு. !

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பதிலளித்த அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சில கேள்விகளும் அமித் ஷா அளித்த பதில்களும்...

மொழி மற்றும் மொழி கல்விக்காக நாம் ஏன் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்?

எங்களைப் பொருத்தவரை எந்த சண்டையும் கிடையாது. எங்களிடம் உறுதியான கொள்கை இருக்கிறது. இந்தியா, இந்திய மொழிகளிலே இயக்கப்பட வேண்டும். மாறாக இந்தியா, வெளிநாட்டு மொழிகளில் இயங்க வேண்டும் என்று நம்புபவர்களுடன்தான் எங்களுடைய போராட்டம். உதாரணமாக சீனாவைச் சொல்லலாம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ரஷியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து இந்திய மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். தென் மாநிலங்கள் அவற்றின் சொந்த மொழிகளில் இயங்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தெலுங்கில், தமிழ்நாடு தமிழிலும் கேரளம் மலையாளத்திலும் இயங்க வேண்டும். ஏனெனில் அங்கு ஹிந்தியின் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இல்லை.

ஹிந்தி மொழி பற்றி...

அனைத்து இந்திய மொழிகளையும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் தேர்வை நாங்கள் 13 மொழிகளில் நடத்தியுள்ளோம். ஜேஇஇ, நீட், யுஜிசி தேர்வுகளை 12 மொழிகளில் நடத்தியிருக்கிறோம். புதிய தேசிய கல்விக்கொள்கை, முதன்மை, தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியை உள்ளூர் மொழிகளில் வழங்க உதவுகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன செய்தார் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். மொழி பிரச்னை அங்கு எப்படி இருக்கிறது?

இந்திய மொழிகள் என்று நான் சொல்லும்போது அதில் தமிழும் இருக்கிறது. நான் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்ல வேண்டியது இதுதான். தமிழில் மருத்துவக் கல்வியை கற்றுக்கொடுங்கள். அதை ஏன் செய்யக்கூடாது? பொறியியல் படிப்பை தமிழில் கற்றுக்கொடுங்கள். அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது? தமிழில் கற்பிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றால் எனக்கு பிரச்னை இருக்கிறது.