1974 ல் கச்சத் தீவிற்கு பதிலாக கிடைத்த இடம் எது தெரியுமா.?
கச்சத்தீவு

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் கச்சத்தீவு குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன.
ஆனால், 1970களில் போடப்பட்ட ஒப்பந்தத்தைச் சற்று ஆராய்ந்தால் அதில் இலங்கையைக் காட்டிலும் இந்தியாவுக்கு லாபம் அதிகமாக இருக்கிறது. நாம் கச்சத்தீவை இழந்திருக்கிறோம்.. பிறகு எப்படி அது நல்ல ஒப்பந்தமாக இருக்கும் என்ற சந்தேகம் வரும். அதற்கான பதிலை நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா இலங்கை இடையே சமீப காலங்களில் மீனவர் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யும் போக்கு தொடரும் சூழலில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்துள்ளன. 1974ல் போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாகவே நமது கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது.
கச்சத்தீவு
285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் வடகிழக்கே 33 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் டெல்ஃப்ட் தீவுக்கு தென்மேற்கிலும் அமைந்துள்ளது. இது பெரியளவில் எந்தவொரு பயனையும் தராத தரிசு தீவாகும். 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் இந்த உருவானதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1795- 1803 வரை சென்னை மாகாணத்தில் ராமநாதபுரத்தின் ஜமீன்தாராக இருந்த ராமநாத ராஜா, கச்சத்தீவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
வாட்ஜ் பேங்க்
1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக 1976ல் இன்னொரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் வாட்ஜ் பேங்க் (Wadge Bank) இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டது.. இது கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள ஒரு கடல் பகுதியாகும்.
வாட்ஜ் பகுதி என்பது கடற்கரை அருகே 18 மீட்டர் ஆழத்தையும் உள்ளே 200 மீட்டர் வரையிலான ஆழத்தையும் கொண்ட ஒரு பகுதியாகும். இந்த வாட்ஜ் பகுதி 3,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கொழும்பில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 115 கடல் மைல் தொலைவில் உள்ளது. உலகின் ஒரு சில வெற்றிகரமான வெப்பமண்டல டிரால் மீன்பிடிப் பகுதிகளில் வாட்ஜ் வங்கி முதன்மையானது என்று 1957ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.. அதாவது இந்தப் பிராந்தியத்தில் மீன் வளம் அதிகமாக இருக்குமாம்.
மிகவும் ஏற்றது
இந்தக் கடல் படுகையின் அடிப்பகுதி மணல் மற்றும் சிப்பிகளால் ஆனது. ஒரு சில இடங்களில் பாறைகளும் காணப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் குமரிமுனை (தற்போதைய கன்னியாகுமரி) பகுதி ஆழ்கடல் மீன்பிடிக்கு மிகவும் ஏற்ற தளமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த வால்ஜ் பேங் பகுதியில் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் போது நல்ல அளவில் மீன்கள் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும் இந்தப் பகுதி எந்தளவுக்குச் செழுமையான மீன் வளத்தைக் கொண்டிருக்கிறது என்பது குறித்து 1987ல் ஒரு விரிவான ரிப்போர்ட்டை வெளியிட்டது. அதில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வாட்ஜ் பகுதி மிகவும் செழிப்பான மீன்பிடி பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய நீர்நிலைகளை விடவும் இந்த இடத்தில் கடல் அமைதியாக இருக்கிறதாம். இதனால் மீன்பிடிப்பதும் ஈஸியாக இருக்கிறதாம்.
இந்தியாவுக்கே உரிமை
1976ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்த வாட்ஜ் பிராந்தியத்தின் மொத்த உரிமையும் இந்தியாவுக்கே ஒதுக்கப்பட்டது. அதேநேரம் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் இலங்கை மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க இந்தியா அனுமதி கொடுத்தது. இந்தியாவால் உரிமம் பெற்ற இலங்கை படகுகள் இந்தப் பகுதியில் மூன்று ஆண்டுகள் மீன்பிடிக்கலாம். 6 இலங்கை மீன்பிடிப் படகுகளுக்கு மேல் அனுமதி இல்லை, ஓராண்டில் 2,000 டன்களுக்கு மேல் மீன்களைப் பிடிக்கக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகள் இருக்கும்.
பெட்ரோல் வளம்
அதேநேரம் இந்தப் பகுதியின் வளம் மீன்வளத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இங்கு மிகப் பெரியளவில் எண்ணெய் படுகையும் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இது குறித்தும் 1976 ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இங்குப் பெட்ரோல் குறித்த ஆய்வு செய்ய இந்தியா விரும்பினால் இது குறித்து இலங்கை அரசுக்கு அறிவிக்க வேண்டும். அப்படிச் சொல்லிவிட்டால் இலங்கை மீன்பிடிப் படகுகள் அங்கு வரக்கூடாது என்பதே ஒப்பந்தமாகும்.
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கச்சத்தீவு என்பது ஆள்நடமாட்டம் இல்லாத குடிநீர் கூட இல்லாத ஒரு சிறு தீவு. அதைக் கொடுத்துவிட்டு நாம் மிகப் பெரிய வளம் கொண்ட வாட்ஜ் பகுதியைப் பெற்றோம். எனவே, இது நமக்குச் சாதகமான ஒன்று தான். நமக்கு கச்சத்தீவு தேவையில்லை என்றாலும் மீனவர் பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதேநேரம் மீனவர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர கச்சத்தீவு ஒரு தீர்வில்லை என்பதே வல்லுநர்கள் கருத்தாகும்.
உண்மை சிக்கல்
கச்சத்தீவை இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர் என்றாலும் அண்மைய ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு அப்பால், இலங்கையின் வடக்குப் பகுதிக்கு மிக அருகிலேயே கைது செய்யப்படுகிறார்கள். தற்போது மீனவர்கள் கச்சத்தீவு அருகே கைது செய்யப்படுவதில்லை என்பதால், கச்சத்தீவு விவகாரம் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்காது. கைதுகள் பெரும்பாலும் இலங்கை கடற்கரைக்கு அருகிலேயே நிகழ்கின்றன.