உடனே ராஜினாமா செய்து விடுங்கள், யாராக இருந்தாலும் பதவி நீக்கம் செய்து விடுவேன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி. !
தமிழகம்

மதுரை மேயரின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து 4 மண்டலம் மற்றும் 2 குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி பொன் வசந்த் மேயராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தலையீடு அதிகமாக உள்ளதாக தலைமைக்கு புகார் சென்றது.
மாநகராட்சி நிர்வாகத்தில் அவரே முடிவெடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுகவினரும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் மேயருக்கு எதிராக திமுக உறுப்பினர்களே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொன் வசந்த் கடந்த மே மாதம் 29ம் தேதி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில்: மதுரை மாநகர் மாவட்டம் 57வது வார்டைச் சேர்ந்த பொன்வசந்த் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிப்பில்: மதுரை மாநகரில் மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளுடனான ஒன் - டூ- ஒன் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின் போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து மதுரை மாநகரை சேர்ந்த திமுகவின் 4 மண்டலம் மற்றும் 2 குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்கள் பாண்டிசெல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் ராஜினாமா செய்தனர்.