ஆபீஸில் செந்தில் பாலாஜி டீ குடிக்கிறார்! அமலாக்கத்துறை என்ன பண்ணிட்டு இருந்தது? உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு கேள்வி?
செந்தில் பாலாஜி
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறைக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
தற்போதைய ஜாமீன் விதிமுறைகளின்படி, செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனையைத் தளர்த்தக் கோரி அவரது தரப்பு மனு அளித்தபோது, உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் கேள்விகளை எழுப்பியது.
செந்தில் பாலாஜி வழக்கு
வரும் வாரம், திங்கட்கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோ செந்தில் பாலாஜி எதற்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்? அதற்கான நியாயமான காரணத்தை எங்களிடம் சொல்லுங்கள், என நீதிபதிகள் அமலாக்கத்துறைக்குக் கேள்வி எழுப்பினர்.
மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அவர் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் உங்கள் அலுவலகத்திற்கு வந்து தேநீர் மட்டுமே அருந்திவிட்டுச் செல்கிறார். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? என்றும் நீதிபதிகள் சரமாரியாக வினவினர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் அதிகாரிகளும் அவருக்காகக் காத்திருப்பதும் ஒருவித தண்டனைதான்," என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து, "மாதத்திற்கு ஒரு முறை மட்டும் அவர் ஆஜராக நிபந்தனைகளைத் தளர்த்தட்டுமா?" என உச்ச நீதிமன்றம் வினவியதற்கு, அமலாக்கத்துறை தரப்பு சம்மதம் தெரிவித்தது.
செந்தில் பாலாஜி பின்னணி என்ன?
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக்கூடாது என்று நாங்கள் (SC ) சொல்லவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால் அவருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அதில் அனுமதி பெற்று அவர் அமைச்சராகலாம். ஆனால் அதற்கு முன் அவர் விதிகளை மீறக்கூடாது.
ஜாமீன் விதிகளை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு. தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்து இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
செந்தில் பாலாஜி - வழக்கில் நடந்தது என்ன?
லஞ்சம் மற்றும் பணமோசடி வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு அளித்த சில கருத்துகளை நீக்கக் கோரி முன்னாள் தமிழக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, விண்ணப்பத்தின் நேரம் மற்றும் நோக்கத்தை ஆராய்ந்தது. "நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த விண்ணப்பத்தை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?" என்று நீதிபதி காந்த் விசாரித்து, பாலாஜியின் நடவடிக்கையின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனு நல்ல நோக்கம் கொண்டது அல்ல என்றும், சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் விவரித்தார்.
செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீன் உத்தரவை கொடுக்கும் போது அமைச்சராக கூடாது என்று தடை எதுவும் இல்லை. வழக்கில் நேரடியாக உத்தரவில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. அமைச்சராவது எதிராக கோர்ட் தீர்ப்பில் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார். அவர் விசாரணையை எதிர்க்கவில்லை. அப்படி இருக்க.. அவர் அமைச்சராவதை தடுக்க முடியாது.
செந்தில் பாலாஜி அமைச்சர்
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எதிராக கடுமையான கருத்துக்களை கோர்ட் தெரிவித்து உள்ளது. ஆனால் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆகும் முன்.. நீங்கள் அமைச்சராக விரும்பினால் அதற்கான மனுவை தாக்கல் செய்யலாம். செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம், என்று நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.
இந்த லஞ்ச பணமோசடி வழக்கை மொத்தமாக டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றலாமே.. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக் கூடாது? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதில் 2 வாரங்களில் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
