திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் 44 பவுன் தங்க நகைகள் மற்றும் செல் போன்கள் திருட்டு. !

குற்றம்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் 44 பவுன் தங்க நகைகள் மற்றும் செல் போன்கள் திருட்டு. !

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 7-7-2025 அன்று கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, வெங்கடாசலபதி, நடராஜர் அனைத்து சன்னதிகளும், விமானங்களும், ராஜகோபுரமும் திருப்பணிகள் செய்யப்பட்டது. ராஜகோபுரத்தின் மீது 40 அடி உயர வெற்றி வேலும் பொருத்தப்பட்டது.

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா

தொடர்ந்து திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். முக்கிய ர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம், மூலவர், வள்ளி, தெய்வானை, சண்முகர், நடராஜர், வெங்கடாசலபதி, கீழகோபுரம் மற்றும் பரிவாரமூர்த்திகளின் விமானங்களுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தங்க நகைகள் திருட்டு

இதையொட்டி. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கண்காணித்தனர். இந்நிலையில் கும்பாபிஷேக சிறப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த அறநிலையத்துறை செயல் அலுவலர் கவிதா திருச்செந்தூர் கோவில் அலுவலகத்திற்கு வந்தார். அவர் நேற்று முன்தினம் அதிகாலை யாகசாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. இதேபோல கடற்கரையில் கும்பாபிஷேகம் பார்ப்பதற்கு நின்றிருந்த 4 பெண் பக்தர்களிடம் இருந்து என மொத்தம் 44 பவுன் தங்க சங்கிலிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் 18 பேர் தங்களது செல்போன் காணவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.