நகைச்சுவை நடிகர் கிங்காங் மகளின் திருமணத்தில் நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !
தமிழகம்

சென்னை: தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங் இல்ல திருமண நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், வீடு வீடாகச் சென்று ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கிங் காங் பத்திரிகை வைத்தும் பலரும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கிங் காங் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தமிழ் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி நடிகராக வளம் வருபவர் கிங் காங். சங்கர் மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிறக்கும் போதே வளர்ச்சி குறைபாடு பாதிக்கப்பட்டவர்.
இருந்த போதும் மனம் தளராமல் சினிமாவில் நுழைந்து நடிகராக வேண்டும் என முயன்று ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அதிசய பிறவி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்த அந்த படத்தில் இடம்பெற்ற பிரேக் டான்ஸ் காமெடி காட்சி இன்றுவரை பிரபலம்.
தனது உயர குறைவு குறைபாட்டையே தனது பிளஸ் பாயிண்டாக மாற்றிக் கொண்டு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்தார் கிங் காங். தொடர்ந்து கிழக்குக் கரை, சாமுண்டி, நாம் இருவர் நமக்கு இருவர், பாஞ்சாலங்குறிச்சி என பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து விவேக், வடிவேல் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து அவருக்கு திருமணம் நடைபெற்றது.
கிங் காங் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரது மகள் கீர்த்தனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டின் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அனைத்து பிரபலங்களின் வீடுகளுக்கும் நேரடியாகவே சென்று திருமண அழைப்பிதழை வழங்கினார் கிங் காங். ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, டி ராஜேந்தர் என பல நடிகர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று பத்திரிகை வைத்திருந்தார்.
இந்நிலையில், கிங் காங்கின் மகள் கீர்த்தனா நவீன் தம்பதியின் திருமணம் இன்று பெசன்ட் நகர் முருகன் கோவிலில் நடைபெற்றது. அதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் நடிகர் முத்துக்காளை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நடைபெற்றது. ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் கிங் காங் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென கிங் காங் இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பல நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகை வைத்தும் கலந்து கொள்ளாத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிஸியான ஷெட்யூலுக்கு இடையிலும் கிங் காங் வீட்டு இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )