துபாய் சாகச கண்காட்சியில் வெடித்து சிதறிய தேஜஸ் விமானம் .!
இந்தியா
துபாயில் விமான கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது.
வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கண்காட்சியை காண கூடியிருந்த பலரும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் குறித்த விமானம், வானில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்து காட்சிகள் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரின் செல்போன்களில் பதிவானது.

இந்த விமானம் வெடித்துச் சிதறிய போது அங்கு பெரும் புகை மண்டலம் எழுந்தது. இதனையடுத்து போர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இது குறித்து எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது;
''துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எப் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். விமானி உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும்.'' என்று தமது பதிவில் கூறியுள்ளது.
தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்த விமானத்தின் விமானி உயிரிழந்தார். இந்நிலையில், 'துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்பர்' என முப்படை தளபதி அனில் சவுகான் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''துபாய் விமானக் கண்காட்சியின் போது இன்று தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.
உயிர் இழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், துயரத்தை எதிர்கொண்டுள்ள விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்போம்.' என்று அனில் சவுகான் கூறியுள்ளார்.
