கிண்டலடித்த மீன் வியாபாரிக்கு அபராதம் விதித்த கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் .!
கோவை

கோவை, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ராஜா... சிறை காவலரான இவர், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, "பிஷ் புட்டீ" என்ற மீன் கடையில், கடந்த 2024 ஆகஸ்ட், 28ம் தேதி மீன் வாங்க சென்றிருக்கிறார்..
ஒரு கிலோ மீன் 299 ரூபாய் என்று கடைக்காரர் சொல்லிஉள்ளார்.. ராஜாவும், தன்னுடைய கூகுள் பே மூலம் பணம் செலுத்தியபோது, மீன்கடைக்காரர் 300 ரூபாய் என்று பில் தந்துள்ளார்.. அத்துடன், ராஜாவின் வங்கி கணக்கிலிருந்தும், கியூஆர் கோடு மூலமாக, 300 ரூபாய் எடுக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த ராஜா
இதைப்பார்த்து அதிர்ந்த ராஜா, எதக்காக 1 ரூபாய் கூடுதலாக எடுத்திருக்கீங்க? என்று கேட்டார். அதற்கு மீன்கடைக்காரர், உன்னுடைய 1 ரூபாயில், நீ என்ன கோட்டையா கட்டப்போற? என்று கிண்டலடித்திருக்கிறார்.
1 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டதுடன், நக்கலாகவும் தன்னை பேசியது, ராஜாவுக்கு மன உளைச்சலை தந்துவிட்டது.. எனவே மீன்கடைக்காரர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜா வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், "மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற 1 ரூபாயை, எதிர்மனுதாரர் திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 2,000 ரூபாய், வழக்கு செலவு, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்" என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்..
அதாவது 1 ரூபாய் கூடுதலாக எடுத்ததற்கு 5 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார் மீன்கடைக்காரர்.. இந்த சம்பவம் கோவையில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.