தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் .!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் .!

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.ஆர்.,பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

13 விவசாயிகளை பலி கொடுத்து இலவச மின்சாரம் பெறப்பட்டது. அதை ரத்து செய்யும் வகையில் மோட்டார் பொருத்துகின்றோம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் உரிமையை கூட்டுறவு சங்கங்கள் இழந்துள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் ரிசர்வ் பேங்க் விதியை பின்பற்றி சிபில் ஸ்கோர் கேட்க மாட்டோம் என கூறுகிறார். ஆனால் கூட்டுறவு சங்க பதிவாளர் சிபில் ஸ்கோர் உறுதி செய்த பின் தான் கடன் கொடுக்க முடியும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

கர்நாடகாவின் கழிவுகள் கலந்து தென்பெண்ணை ஆறு கழிவு நீர் கால்வாயாக மாறி உள்ளது, மீன்கள் செத்து மிதக்கிறது தண்ணீரை குடிக்க முடியாத நிலையில் உள்ளது. நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு உண்டான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும். 

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 பெயரைச் சொல்லி நிலங்கள் நீர்நிலைகளை அபகரிக்கும் மோசமான சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் அமல்படுத்துகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பரந்தூர் பகுதி விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் ஏரிகளையும் நிலங்களையும் கையகப்படுத்தி விமான நிலையம் அமைத்தே தீருவேன் என தமிழக அரசு நில மாப்பியாக்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தேசிய அளவில் வந்துள்ள விவசாய சங்க தலைவர்கள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டத்தை கொண்டு வர வேண்டும், எம் எஸ் சாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டங்களை துவங்குவதற்கான கலந்தாய்வு கூட்டங்களை மாநிலம் தோறும் நடத்தி வருகிறோம். 

இன்று 6ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் தென்னிந்தியா அளவில் இருக்கும் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற இருக்கிறது நாளை  7ம் தேதி கர்நாடக மாநில விவசாயிகள் சபை கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து டெல்லியில் கூட்டம் நடத்தி இந்தியா முழுவதும் மோடிக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மா, பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆந்திரா அரசு நான்கு ரூபாய் மானியம் கொடுத்து மா கொள்முதல் செய்கிறார்கள். இங்கு மாங்கூழ் தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை கடந்த ஆட்சியில் திறக்கப்பட்ட குளிர் பதன கிடங்கு கூட செயல்பாட்டுக்கு வரவில்லை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு விவசாயிகளை கை கழுவி விட்டது. விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்துகிறது. 

விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு காய்கறிகளை வாங்கி கொல்லை லாபத்திற்கு விற்கிறார்கள் அதை கண்காணிக்க வேண்டிய துறைகள் கூட கண்டுகொள்ளாமல் உள்ளது. இதே நிலை தொடருமானால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து களமிறங்குவோம் என எச்சரிக்கை செய்கிறோம்.

கார்ப்பரேட்டுக்கு ஆதரவான கொள்கையோடு பாஜக மோடி அரசு அதானி அம்பானியோடு கைகோர்த்து செயல்படுகிறது, அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் போடும் ஒப்பந்தத்தால் இந்திய உழவர்களின் உற்பத்தி செய்யும் பொருள் விலை மிக மோசமாக போகும், இந்திய விவசாயிகளுக்கு மிக மோசமாக அமையும் வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கூட்டங்களை நடத்துகின்றோம், மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுக்கு ஆதரவான அரசாங்கம் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு கைக்கூலியாக செயல்படும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. 

திமுக அரசும் கார்ப்பரேட்டுகளுக்கு துணையாக மோடியுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுதான் விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர் விளைநிலங்களை அபகரிக்கின்றனர். இந்தியா முழுவதும் விளைநிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அதற்க்கு திமுக அரசு துணை போகிறது என பேசினார். 

நிகழ்ச்சியின் போது தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜிட் சிங் தல்லேவால், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.