பீகார் Sir திட்டத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். ! 3 நாட்களில் பதிலளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு. !

பீகார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

பீகார் Sir திட்டத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். !  3 நாட்களில் பதிலளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு. !

டெல்லி: தேர்தல் நடைபெறும் பீகாரில் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை நடந்து வருகிறது.

இந்த நடைமுறையில் சுமார் 65 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களைச் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் அங்குச் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் கீழ் பீகார் வாக்காளர்கள் ஆவணங்களைப் பூர்த்தி செய்து தர வேண்டும். மேலும், தான் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கூறிய 11 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பீகாரில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை நடத்த ஜூன் 24ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துப் பல அமைப்புகள் அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதன்படி ஏடிஆர் என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கிடையே அதே அமைப்பு இப்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் உயிருடன் உள்ளனரா, நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நீக்கப்பட்டனரா என்பதைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த், உஜ்ஜல் புயான் மற்றும் கோடீஸ்வர சிங் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காரணம் தெரியவில்லை

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இப்போது இறுதி வரைவுப் பட்டியல் மட்டுமே வெளியாகி இருப்பதாகவும் வரும் நாட்களிலேயே அதற்கான காரணம் வெளியாகும் என்று தெரிவித்தனர். இருப்பினும் ஏடிஆர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் சில கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்பது குறித்த காரணத்தைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தவில்லை என பூஷன் வாதிட்டார்.

சனிக்கிழமை வரை டைம்

இதைக் கேட்ட நீதிபதிகள் சனிக்கிழமைக்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே பகிரப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பிடமும் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும், "இதில் பாதிக்கப்படக்கூடிய ஒவ்வொரு வாக்காளரையும் கண்காணித்து தேவையான தகவல்களைப் பெறுவோம். சனிக்கிழமைக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். பூஷண் அதை ஆய்வு செய்த பிறகு, வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தகவல்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம்" என்று நீதிபதிகள் கூறினர்.

காரசார வாதம்

வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்த 75% வாக்காளர்கள், 11 ஆவணப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட எந்த ஆதரவு ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்றும், ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் பூத் லெவல் அதிகாரி (BLO) பரிந்துரையின் பேரிலேயே அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன என்றும் பூஷண் குற்றம் சாட்டினார். இது தொடர்பான பிரதான வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் நிலையில், அப்போது இந்த குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.