அண்ணாமலை பேசியது பெரிய தவறு.." திட்டவட்டமாக எதிர்த்த ஏக்நாத் ஷிண்டே.. மகாராஷ்டிராவில் வெடித்த பூகம்பம்.!

மும்பை

அண்ணாமலை பேசியது பெரிய தவறு.." திட்டவட்டமாக எதிர்த்த ஏக்நாத் ஷிண்டே.. மகாராஷ்டிராவில் வெடித்த பூகம்பம்.!

மும்பை: அண்ணாமலை மும்பை குறித்துக் கூறிய கருத்துகள் மகாராஷ்டிர அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணாமலை கருத்துகள் தவறானவை என்ற ஷிண்டே, அவை சிவசேனாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்காக அண்ணாமலை கடந்த வாரம் பிரச்சாரம் செய்தார். அப்போது மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானது இல்லை.. அது சர்வதேச நகரம் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலை

மும்பையில் பேசிய அண்ணாமலை, "மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல.. அது ஒரு சர்வதேச நகரம். மும்பை ₹75,000 கோடி பட்ஜெட் கொண்டது. சென்னைக்கு ₹8,000 கோடி, பெங்களூரூவுக்கு ₹19,000 கோடி தான் பட்ஜெட். ஆனால், மும்பை பட்ஜெட் அதை விட மிகப் பெரியது" என்றார். அண்ணாமலையின் இந்த கருத்து மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இதற்கிடையே அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அண்ணாமலை இதுபோல பேசியிருக்கக்கூடாது என்று சொன்ன அவர், மும்பை மகாராஷ்டிராவின் பிரிக்க முடியாத பகுதி என்றும் அதில் மாற்றுக்கருத்தே இல்லை என்றும் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே காட்டம்

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழுக்கு ஷிண்டே அளித்த பேட்டியில், "அண்ணாமலை கூறியது சரியல்ல. அது தவறு.. அண்ணாமலை அப்படிப் பேசியிருக்கக் கூடாது. இதை நான் பாஜகவிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளேன், அவர்களும் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். மும்பை மற்றும் மராத்தி அடையாளத்தின் மீதான சிவசேனாவின் நிலைப்பாடு தெளிவானது,. அதில் எந்தவொரு சமரசமும் இல்லை. சில தனிப்பட்ட தலைவர்களின் கருத்தைக் கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது.

சந்தேகமே வேண்டாம்

மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி.. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதில் எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை. யாராலும் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க முடியாது.. யாருக்கும் மும்பையைப் பிரிக்கும் தைரியம் இல்லை. இங்கிருந்து பிரித்து அங்குச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு மும்பை ஒன்றும் ரயில் பெட்டி அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அதேபோல பாஜக தலைவரான கிருபா சங்கர் சிங் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மும்பைக்கு மேயராக வர வாய்ப்பு இருக்கிறது என்பது போலக் கூறியிருந்தார். அதுவும் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இது தொடர்பாகவும் ஷிண்டே தெளிவுபடுத்தினார். தனிப்பட்ட தலைவர்கள் கூறும் கருத்துகள் ஒட்டுமொத்தக் கூட்டணியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என ஷிண்டே கூறினார்.

ஷிண்டே திட்டவட்டம்

இது தொடர்பாக ஷிண்டே மேலும் கூறுகையில், "கிருபா சங்கர் சிங் கருத்து பாஜக கருத்து இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து. ஒரு தனிநபரின் கருத்தை ஒட்டுமொத்தக் கூட்டணியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. கிருபா சங்கர் சிங் கருத்து கூட்டணியின் கருத்து இல்லை. அண்ணாமலையின் கருத்தும் சிவசேனாவின் நிலைப்பாடு அல்ல.

மும்பை குறித்த சிவசேனாவின் நிலைப்பாடு எப்போதுமே பால் தாக்கரேயின் சித்தாந்தத்தின்படியே இருக்கும். மும்பையை மகாராஷ்டிராவின் பிரிக்க முடியாத பகுதியாகவே சிவசேனா எப்போதும் கருதுகிறது. அந்த நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. யாரோ சிலர் சொல்லும் கருத்துகளைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்ட இதைப் பெரிய விஷயமாக்குகிறார்கள். எது உண்மை, எது அரசியல் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.