அழகன் முருகன் மலைக்கோவிலில் மண்டலபிஷேக நிறைவை ஒட்டி திருக்கல்யாண உற்சவம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அழகன் முருகன் மலைக்கோவிலில் மண்டலபிஷேக நிறைவை ஒட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சை. திரளான பக்தர்கள் வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் குடியிருப்பு பகுதியில் புதிதாக மலைமீது அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத அழகன் முருகன் திருக்கோயிலில் கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. நாள்தோறும் திருக்கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

மண்டல பூஜை நிறைவடைந்ததை ஒட்டி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி கணபதி பூஜை மற்றும் சிறப்பு யாகங்களுடன் துவங்கிய திருக்கல்யாண உற்சவம் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஓத திரு கலச பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்று வந்தன.
பின்னர் உற்சவமூர்த்தி வள்ளி மற்றும் தேவசேனா தேவிகளுடன் அழகன் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சீர் வரிசைகளுடன் அஷ்டோத்திர சதநாமாவளி அர்ச்சனை செய்யப்பட்டு எம்பெருமான் முருகனுக்கு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவத்தில், அழகன் முருகப்பெருமான் தனது தேவியர்கள் வள்ளி மற்றும் தேவசேனாவிற்கு திருமாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டன.
செய்தியாளர்
மாருதி மனோ
