குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் வருகை - 2 அடுக்கு பாதுகாப்பு; `ரெட் ஸோன்' என அறிவிப்பு .!

வேலூர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் வருகை - 2 அடுக்கு பாதுகாப்பு; `ரெட் ஸோன்' என அறிவிப்பு .!

வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தைத் திறந்துவைப்பதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (17-12-2025) வேலூர் வருகிறார்.

இதற்காக, டெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானத்தில் புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வருகிறார். அதைத்தொடர்ந்து, வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தியான மண்டபத்தைத் திறந்து வைத்து சுவாமி தரிசனம் செய்கிறார்.

அதன் பிறகு, கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுகிறார். இதையடுத்து, மதியம் 12.30 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸார் கடந்த 2 நாட்களாக வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தங்கக் கோயில் வளாகப் பகுதி முழுவதுமாக சிறப்பு பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 'கோயில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஃபோம் டெண்டர்' எனும் திரவங்களால் ஏற்படும் தீயை அணைக்க உதவும் நுரை (foam) கொண்ட சிறப்பு வாகனங்கள் இரண்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து வேலூருக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் வாகனங்கள் மற்றும் உடனடி மீட்புக் குழு வாகனங்கள் என கூடுதலாக மேலும் 6 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் ஸ்ரீபுரத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

87 தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். நேற்று முதலே ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடத்தப்பட்டதால், வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தபடியே இருந்தன.

வேலூருக்கு வரும் குடியரசுத் தலைவரை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் நாளை காலை முன்கூட்டியே சென்னையிலிருந்து வேலூருக்கு சாலை மார்க்கமாக வருகிறார்.

இந்த நிகழ்வையொட்டி, வேலூர் பகுதி முழுவதுமாக ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, 'கோயில் பகுதியோட்டிய விடுதிகளில் சட்டவிரோதமாக யாரேனும் தங்கியுள்ளார்களா? சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் பதுங்கியுள்ளார்களா?' என்பதை கண்டறியவும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குடியரசுத் தலைவரின் வருகைக் காரணமாக, நாளை மதியம் 12.30 மணிக்குப் பிறகே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்' என ஸ்ரீபுரம் தங்கக் கோயில் நிர்வாகமும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதற்காக, ஸ்ரீபுரம் - ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்படுகிறது. மேலும், பொற்கோயில் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளும் 'ரெட் ஸோன்' எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, 'நாளை 17-ம் தேதி அன்று மத்திய அரசு பணிகளுக்காகவோ, மாநகராட்சி / நகராட்சி தொடர்புடைய சர்வே பணிகளுக்காகவோ, தனியார் நிறுவனங்களின் பணிகளுக்காகவோ அல்லது எவ்வகையான விழாக்களுக்காகவோ டிரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது' என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.