குழந்தை பிறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு - ஆய்வுத் தகவல்.!
தமிழ்நாடு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது தற்போது ஆய்வறிக்கைகள் மூலம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவது சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் தொகை ஆய்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அரசும், மக்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கடைபிடித்ததும், தற்போது வாழ்க்கைச் சூழலும் தான் காரணம் என்கின்றனர்.
அதே நேரத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில், குழந்தை பிறப்பு விகிதம் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து சரிவு காணப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குழந்தை பிறப்பு விகிதம்
தமிழகத்தை பொறுத்தவரை குழந்தை பிறப்பு விகிதம் சரிவுக்கு சமூக மாற்றங்களே முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகின்றனர். 1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் திருமணம் ஆனதும் விரைவில் குழந்தை பிறப்பு என்பது இயல்பான ஒன்றாக இருந்தது. 3 அல்லது 4 குழந்தைகள் பெற்றுக் கொள்வது பெரும்பாலான குடும்பங்களில் சாதாரணமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமூக மாற்றங்கள்
பெண்களின் கல்வி நிலை உயர்ந்துள்ளதுடன், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் திருமண வயதும் உயர்ந்துள்ளது. திருமணம் தாமதமாக நடைபெறுவதால் குழந்தை பெறும் காலமும் பின்னோக்கி நகர்கிறது. அதேபோல் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் அணுகுமுறையும் மாறியுள்ளது. குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத்தரம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நாம் இருவர் நமக்கு ஒருவர்
இதன் காரணமாக அதிக குழந்தைகள் பெறுவதை தவிர்த்து, ஒரு குழந்தை அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் என்ற மனநிலை வலுப்பெற்றுள்ளது. 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற எண்ணமே தற்போது பல குடும்பங்களில் மேலோங்கியுள்ளது. தமிழகத்தில் குடும்ப நல திட்டங்கள், கருத்தடை வசதிகள் மற்றும் மகப்பேறு விழிப்புணர்வு சேவைகள் பல ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பெண்களுக்கு தேவையான ஆலோசனைகள் எளிதாக கிடைக்கின்றன.
நகரமயமாக்கல்
இதுவும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் நகரமயமாக்கல், கல்வி போட்டி, வேலைவாய்ப்பு அழுத்தம் போன்றவை தமிழகத்தில் பிற மாநிலங்களை விட அதிகமாக இருப்பதும் இந்த சரிவுக்கு காரணமாக உள்ளது. புள்ளிவிவரங்களை பார்க்கும் போதே இந்த மாற்றம் தெளிவாக தெரிகிறது. 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தமாக 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
பிறப்பு விகித சரிவு
ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை பதிவான குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக மட்டுமே உள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் போது தமிழகத்தில் சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான சரிவாகும். தேசிய அளவில் ஆண்டுக்கு 1.3 முதல் 1.5 சதவீதம் வரை குழந்தை பிறப்பு விகிதம் உயர்ந்து வகிறது.
எதிர்கால சிக்கல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மக்கள் தொகை அமைப்பு போன்ற துறைகளில் புதிய சவால்கள் உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
