கடையநல்லூரில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.!
குற்றம்
கடையநல்லூரில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி, டிச - 10
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா கோனார் என்பவரது மகன் ராமர் என்பவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் 04.09.2016 ல் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து ராமர் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்பு 2 மாதம் கழித்து
விடுமுறையில் கடையநல்லூர் வந்து இரண்டு மாதம் தங்கி விட்டு மீண்டும் திரும்ப மாலத்தீவுக்கு சென்று விட்டார். வேல்மதியின் கணவர் அடிக்கடி குடித்து வந்துள்ளார்.இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமர் மற்றும் அவரது மனைவி வேல்மதி ஆகியோர் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன்கோவில் தென்வடல் தெருவில் சிந்தாமணி என்பவரின் வீட்டு மாடியில் உள்ள வீட்டில் சுமார் ஆறு மாத காலமாக வாடகைக்கு தனிக்குடித்தனம் இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் 12.04.2018 இரவு ராமர் மற்றும் அவரது மனைவி வேல்மதிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த ராமர் வேல்மதியின் கழுத்தில்
தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இது பற்றி வேல்மதியின் தாய் வெள்ளதாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த ராமருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
