திருவண்ணாமலையில் இருந்து கோவை திரும்பிய சப்-இன்ஸ்பெக்டர்.. வீட்டிற்கு போகும் போது இப்படியா ஆகணும்.!
கோயம்புத்தூர்
கோவை அருகே உள்ள பட்டணம் ராமலிங்க நகரில் 55 வயதாகும் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஹரிகிருஷ்ணா (18) என்ற மகனும், மிருதுளா (21) என்ற மகளும் உள்ளனர். இருவரும் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காவலர்கள் சென்று இருந்தனர். அந்தவகையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்பழனிசாமியும் கடந்த 30-ந் தேதி திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். இதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு போலீஸ் வாகனத்தில் திருவண்ணாமலை சென்றார். பாதுகாப்பு பணி முடிந்த பின்னர் அவர் கடந்த 5-ந் தேதி கோவைக்கு திரும்பினார்.
பின்னர் அவர் காவல் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். அவர் எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் உள்ள சிந்தாமணி புதூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் திடீரென்று பிரேக் போட்டு நின்றது. இதனால் நிலைதடுமாறிய அவர் காரின் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி இரவில் பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பழனிசாமியின் உடல் சூலூரில் உள்ள மின்மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
