தொழிலாளிகளுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுப்பது இல்லை என்றும், கூலியும் நாள் ஒன்றுக்கு ரூ.100 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாரலப்பள்ளி ஊராட்சியில், நூறு நாள் வேலைத்திட்டதில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவது இல்லை என புகார் எழுந்ததை அடுத்து, ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திர மோகன் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சி மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் தொழிலாளிகளுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுப்பது இல்லை என்றும், கூலியும் நாள் ஒன்றுக்கு ரூ.100 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளதையடுத்து சம்பவ இடத்திற்கு சமுக நகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது எங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை தரனும். ஆனால் எங்களுக்கு நூறு நாள் வேலை என்பதே இல்லை. ஆண்டுக்கு 20 நாட்கள் மட்டுமே வேலை தருகிறார்கள், கூலியும் சரியாக தருவது இல்லை, சில நாள்கள் ரூ.100 மட்டுமே கூலியாக தருவதாக குறிப்பிட்டனர். இதுகுறித்து
கேட்டால் முறையான பதிலும் கூறுவது இல்லை. கொடுக்கின்ற பணத்தினை பெற்றுக் கொண்டு போங்கள் என்று ஊராட்சி செயலாளர் கூறுவதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து பேசிய சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் கூறுகையில்.....
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு சிறப்பு திட்டத்தினை சீர்குலைக்கும் வகையில் இந்த நூறு நாள் வேலையை ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரி, பணிபுரியும் தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய 336 ரூபாய்க்கு பதிலாக கூலியாக 100 ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது மிகவும் வேதனையாக உள்ளது,
எனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தினை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களிடம் மனுவினைக் கொடுத்தார். இதனைத் தொடந்து 100 நாள் தொழிலாளிகளுடன் சேர்ந்து குட்டையை தூர்வாரும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டு குட்டையில் இருந்து மண் அள்ளும் பணியில் டாக்டர் சந்திரமோகன் ஈடுபட்டார்.
அப்போது பணிதள பொறுப்பாளர் ரேவதி, நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ