கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நேரம் அதிகரிக்க கோரி நெல்லை எம்பி யிடம், கடையம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி கோரிக்கை மனு .!
தென்காசி

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நேரம் அதிகரிக்க கோரி நெல்லை எம்பி யிடம், கடையம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி கோரிக்கை மனு
தென்காசி ஆகஸ்ட் 9
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நேரம் அதிகரிக்க கோரி கடையம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பார்வதிநாதன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸிடம் இன்று கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது .!
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் 5 யூனியங்களும்,
4 பேரூராட்சிகளும் அமைந்துள்ளது. மேற்படி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வருடம் தோறும் ஆடி மாதம் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரவு நேரங்களில் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது காலம் காலமாக நடை பெற்று வருவது வழக்கம். தற்போது சில காலமாக தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் விதித்துள்ள விதி முறைகளின் படி இரவு 10 மணிக்குள் கோவில் நிகழ்ச்சிகளை முடித்து விட வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பில் கூறுகின்றனர்.
இதனால் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமவாசிகள் கோவில் கொடை நடத்துவதில் மிகுந்த சிரமம் இருந்து வருகிறது. பொதுமக்கள் வருடம் ஒருமுறை மட்டுமே நடைபெறும் கோவில் கொடை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு உறவினர்கள் மற்றும் ஊரார்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான முறையில் கொண்டாட அதிகமான பணத்தை செலவழித்து விமர்சியாக செயல்படுத்தும் நிலையில் காவல்துறையினர் நேர கட்டுப்பாடு விதிப்பதால் கோவில் கொடை விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கோவில் திரு விழாவில் இரவு 12 மணி வரை இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா நடை பெற்று வருகிறது மேற்படி திருக் கோவிலில் இரவு நேர கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் எந்த விதமான கட்டுப் பாடுகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஒரே மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு பகுதிகளில் நேர கட்டுப்பாடுகள் மாறி மாறி பின்பற்றுவதால் பொதுமக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
சங்கரன் கோவிலில் இரவு ஒரு மணி வரை இன்னிசை கச்சேரி மற்றும் இரவு பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்று வரும் நிலையில் அதே மாவட்டத்தில் அமைந்துள்ள பிற கிராமங்களில் கோவில் நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்று காவல்துறையினர் சார்பில் கூறுவதால் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காவல்துறை நண்பர்கள் இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு பகைமை உணர்வு ஏற்படும் சூழ்நிலை அமைந்துள்ளது. மேலும் கிராமங்களில் பல நூறு ஆண்டுகளாக சுடலைமாடன் கோவில் கொடைகளில் இரவு நேரங்களில் சாமக்கொடை எனப்படும் வழிபாடு செய்யப்படுவது வழக்கம். மேற்படி சாமக்கொடை வழிபாடு நள்ளிரவில் நடைபெறும் வரையிலும் கலை மற்றும் கச்சேரி நிகழ்ச்சிகள் நடத்துவது காலம் காலமாக கிராமப் புறங்களில் பின்பற்றி வரப்படுகிறது.
எனவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழக முதல்வர் ஆகியோர் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சேர்த்து அனைத்து பொது மக்களுக்கும் இரவு ஒரு மணி வரை கோவில் திருவிழா மற்றும் கச்சேரி கலை நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி தரும்படி கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்
பட்டுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்