சிறுத்தை எப்போதும் சிறுத்தை தான்,பிரதமர் நிகழ்ச்சியில் திருமா பங்கேற்றது குறித்து வன்னியரசு கருத்து. !

விசிக - பாஜக - அதிமுக

சிறுத்தை எப்போதும் சிறுத்தை தான்,பிரதமர் நிகழ்ச்சியில் திருமா பங்கேற்றது குறித்து வன்னியரசு கருத்து. !

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. குறிப்பாக, பிரதமர் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என்று ராஜேந்திர பாலாஜி கூறி இருந்தார்.

பிரதமர் மோடி தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ் மன்னர்கள் மீது கொண்டுள்ள பற்றை அறிந்து, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது பாராட்டத்தக்கது என்று கூறினார்.

மேலும், இது பிரதமரை வரவேற்கும் சிறப்பான செயல் என்றும், தமிழக மக்கள் மீது மோடி கொண்டுள்ள அன்பை இது பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு வன்னியரசு பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றத்தில் எந்த திருப்புமுனையும் இல்லை என வன்னியரசு பதிலடி கொடுத்தார். பாஜகவுடன் அரசியல் ரீதியாக எந்த உறவும் வைக்க மாட்டோம் என்று திருமாவளவன் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளதாகவும், எந்த மேடையில் இருந்தாலும் சிறுத்தை சிறுத்தையாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரபாகவும் அரசியல் நாகரிகமாகவும் பார்ப்பதாக அவர் தெரிவித்தார். நம்பிக்கையற்ற சூழலில் அதிமுக இருப்பதையே ராஜேந்திர பாலாஜி பேச்சு உணர்த்துவதாக வன்னி அரசு கூறினார்.

மேலும் சனாதன எதிர்ப்பில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் திட்டவட்டமாக கூறிய அவர், தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் அதிமுக பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.