இரண்டு குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொன்ற சித்தப்பா, மூன்றாவது குழந்தையும் தாக்கப்பட்டதால் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி. !

ஓசூர்

இரண்டு குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொன்ற சித்தப்பா, மூன்றாவது குழந்தையும் தாக்கப்பட்டதால் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி. !

ஓசூர்: ஓசூர் அருகே, மாநில எல்லையில் மனநிலை பாதித்த சித்தப்பா, சுத்தியலால் வெறித்தனமாக தாக்கியதில், 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு குழந்தை படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், யாதவகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சான்பாஷா (39). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஹெப்பகோடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமசந்திரா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி தியானா(32), அங்குள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் டெய்லராக பணி புரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் முகமது இஷாக் (9), முகமது ஜூனேத் (7), முகமது ரோஷன்(6). மூன்று பேரும் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தனர். சான்பாஷாவுடன் அவரது தம்பி காசிம்(35) மற்றும் தாயார் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட காசிம், அடிக்கடி வீட்டை விட்டு எங்காவது வெளியே சென்று விடுவதும், அவரை குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருவதும் வாடிக்கை.

இந்நிலையில், நேற்று முன்தினம்(சனிக்கிழமை) காலை சான்பாஷாவும், தியானாவும் வேலைக்கு சென்று விட்டனர். அவரது தாயார் கடைக்கு சென்று விட்டார். வீட்டில் காசிம் மட்டும் தனியாக இருந்தார். இதனிடையே, அரை நாள் பள்ளி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த சான்பாஷாவின் மகன்கள் 3 பேரும், வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெறி பிடித்தவர் போல மாறிய காசிம், சுத்தியலை எடுத்து, சிறுவர்கள் 3 பேரையும் ஆவேசமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த 3 சிறுவர்களும், ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடி வந்தனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் கதவை உடைத்து பார்த்த போது, 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பார்த்த போது, முகமது இஷாக், முகமது ஜூனேத் ஆகியோர் சடலமாக கிடந்தனர். முகமது ரோஷன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வீட்டில் இருந்த காசிமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.