சினிமா பிரபலங்களுக்கு உயர் ரக கஞ்சா விற்பனை செய்த துணை இயக்குநர் உட்பட 3 பேர் கைது. !
சென்னை

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க காவல் ஆணையர் அருண் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகளை அமைத்துள்ளார்.
அவர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க தனிப்படை போலீஸாருடன் 'போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு' போலீஸாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏழுகிணறு போலீஸார் ஏழுகிணறு, பெரியண்ணா தெருவில் மாறு வேடத்தில் கண்காணித்தனர்.
அப்போது அங்கு நின்ற 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதித்தபோது, அவர்கள் சட்டவிரோதமாக ஓ.ஜி. கஞ்சா எனப்படும் உயர் ரக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் தண்டையார்பேட்டை வ.உ.சி நகரைச் சேர்ந்த ஶ்ரீபிரேம்குமார் (32), விம்கோ நகர் ராஜன் (36), பாரிமுனை அலெக்ஸ் சந்தோஷ் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 750 கிராம் ஓ.ஜி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட ஶ்ரீபிரேம்குமார் சினிமா துறையில், உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மேலும், இவர் வெளிமாநிலங்களில் இருந்து உயர் ரக கஞ்சாவை வாங்கி வந்து சினிமா துறையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், கிராம் ஒன்றுக்கு ரூ.1000 விலை வைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.