என் பதவி போச்சு எனக்கு அழுகையே வருது தலைவரே என முதலமைச்சரிடம் வேதனையை கொட்டிய காரமடை முன்னாள் நகர செயலாளர்.!
காரமடை
என் பதவி போச்சு.. அழுகை வருது தலைவரே.. என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் காரமடை முன்னாள் நகர செயலாளர் வெங்கடேசன் போனில் பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொய்யான புகார்களை கூறி தனது கட்சி பதவியை பறித்துவிட்டதாகவும், பாஜகவுடன் தொடர்பு வைத்து இருப்பவருக்கு தற்போது நகர செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பதகாவும் கண்ணீர் விடாத குறையாக, தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகளை அவ்வப்போது தொடர்பு கொண்டு, கட்சி பணிகள், களப்பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதை உறுதி செய்யும் விதமாகவும் திமுக நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
எஸ்.ஐ.ஆர் குறித்து பேசிய ஸ்டாலின்
எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை தீவிரமாகக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் 8 மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்ஐஆர் பணிகளை மண்டல பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில் பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்
முதல்வர் ஸ்டாலினும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவ்வப்போது பேசி வருகிறார். இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்ட காரைமடை நகர செயலாளர் வெங்கடேசன் என்பவரிடம் முக ஸ்டாலின் பேசினார். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் பொய்யான புகார்களை கூறி தனது கட்சி பதவியை பறித்துவிட்டதாகவும் பாஜகவுடன் தொடர்பு வைத்து இருப்பவருக்கு தற்போது நகர செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பதகாவும், தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
அழுகை வருகிறது தலைவரே..
இவை அனைத்தும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு தெரிந்தே நடந்து இருப்பதாகவும் தற்போது பொறுப்பு வழங்கபட்டுள்ள குருபிரசாத் என்பவர் பாஜக ஆதரவாளர் என்றும் அவரை யாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை எனவும் அவரை மாற்றும்படி புலம்பும் வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் நகர செயலாளர் வெங்கடேசன் பேசிய வீடியோவில் பேசியதாவது; -
தலைவா.. வணக்கம் தலைவா.. அழுகை வருது தலைவரே.. எஸ்.ஐ.ஆர் பணிகள் எல்லாம் நன்றாக போயிட்டு இருக்கு தலைவரே.. 70 சதவீதம் கொண்டு வந்துவிட்டார்கள்.. ஓரளவுக்கு வந்தாச்சு.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு தலைவரே.. 15 வருஷமா.. நிறைய செய்து கொண்டு இருக்கிறோம். எல்லாம் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.
எல்லாரும் நொந்து போய் கிடக்கிறார்கள்
எல்லா டீமிடமும் கேட்டு பாருங்கள். நம்ம கிட்ட ஒரு கடுகு அளவு கூட குறைவு இல்லை. என் மேலே அபாண்டமாக சொல்லி அநியாயமாக மாற்றிட்டாங்க தலைவரே.. நம்மதான் தலைவரே ஆட்சிக்கு வரப்போகிறோம். காரமடை மட்டும் கொஞ்சம் காப்பாற்றுங்க தலைவரே.. வேலைக்கு ஆகாத பாஜக நபர் தலைவரே.. தவறான ஆள் போட்டு எல்லாரும் நொந்து போய் கிடக்கிறார்கள்.
எனக்கு இல்லாட்டியும் பரவாயில்லை தலைவரே.. உங்களுக்காக நான் வேலை செய்துட்டு இருப்பேன். தயவு செய்து அவரை (குருபிரசாத்) மட்டும் மாற்றிடுங்க.. என் மேலே கடுகளவு குற்றச்சாட்டு சொல்லுங்க தலைவரே.. நீங்க உடம்பை மட்டும் பார்த்துக்கோங்க என்றும் ஸ்டாலினிடம் பேசுகிறார்.
