வி சி க வினர் என்னை தாக்கியதற்கு இது தான் காரணம், ஏர்போர்ட் மூர்த்தி பேட்டி. !

விசிக

வி சி க வினர் என்னை தாக்கியதற்கு இது தான் காரணம், ஏர்போர்ட் மூர்த்தி பேட்டி. !

சென்னையில் இன்று காலை டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தியை 4 பேர் கொண்ட கும்பல் திடீரென மறித்து தாக்குதல் நடத்தினர்.

போலீஸ் அலுவலகம் முன்பே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தன் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என்று ஏர்போர்ட் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். தன்னை தாக்கியவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்திற்கு அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியும் வந்திருந்தார். அப்போது, டிஜிபி அலுவலக நுழைவு வாயில் அருகே நின்ற 4 பேர் கும்பல் திடீரென ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கினர்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்

அவரது சட்டை கிழியும் அளவிற்கு தாக்கியதாகவும், செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தன்னை ஏன் அவர்கள் தாக்கினார்கள் என்று ஏர்போர்ட் மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விளக்கம் அளித்த ஏர்போர்ட் மூர்த்தி

பட்டியல் சமூக மக்களின் சப்ளேனில் ("பட்டியல் சாதி துணைத் திட்டம்" - Scheduled Caste Sub-Plan - SCSP) கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில், ரூ.120 கோடி நிதி செலவில் ஆதரவு நல பள்ளியின் உள்கட்டமைப்பை சரி செய்ய அனுப்பியது. அதில் தமிழக அரசு 2 கோடி ரூபாயை மட்டும் செலவு செய்துவிட்டு மீதியுள்ள ரூ.118 கோடியை திருப்பி அனுப்பியது.

இந்த நிதியை ஏன் தமிழக அரசு திருப்பி அனுப்பியது என சட்டசபைக்கு செல்லும் திருமாவளவன் கேட்க மாட்டார். சட்டசபையில் இருக்கிறீர்கள்.. ஏன் இதை கேட்கவில்லை.. அப்படின்னு நாம கேட்கின்ற போது அவர்களுக்கு நம் மீது ஆத்திரம் வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7,833 கோடியை சப்ளேனில் இருந்து திருப்பி அனுப்பியிருக்கிறது அரசாங்கம்.

எதிர்த்து கேட்டால் தாக்குகிறார்கள்

ஆனால் இன்றைக்கு மத்திய அரசு ரூ.2,200 கோடி நிதி தரவில்லை என்று காங்கிரஸ் உண்ணாவிரதம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.7,833 கோடி நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றது சப்ளேனில். இதையெல்லாம் ஏன் என்று திருமாவளவன் கேட்கவில்லை.. சட்டசபையில் இருக்கின்ற எம்எல்ஏக்கள் கேட்பதில்லை. இதுபற்றி நாம் எதிர்த்து கேட்டால் எங்களை தாக்குவதற்கு வருகிறார்கள்.

போலீசாருக்கு தெரிந்தே நடக்கிறது

இதற்காக நான் புகார் எதுவும் கொடுக்கப்போவதில்லை. அவர்கள் புகார் கொடுப்பார்கள். கொடுத்துவிட்டு போகட்டும். நான் இதுபோன்று பலமுறை தாக்கப்பட்டிருக்கிறேன். அதற்கு எவ்வளவோ முறை புகார் கொடுத்து இருக்கிறேன். ஆனால் ஒருமுறைகூட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. எந்த ஒரு நடவடிக்கையும் போலீஸ் எடுக்காது. இப்போது என்னை தாக்கியவர்கள் கூட ஓடிப் போய்விட்டார்கள். போலீசாருக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கிறது? எல்லாம் போலீசுக்கு தெரிந்துதான் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.