ஓடும் ரயிலில் கழிவறை சென்ற பெண், தண்டவாளத்தில் பிணமாக மீட்பு. !
தமிழகம்

திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். அவரது மனைவி ரோகிணி (வயது 30), சமீபத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார்.
இவர்களது குழந்தைக்கு வயது இரண்டரை. ராஜேஷின் தந்தை சென்னையில் வசிப்பதால், தந்தையை சந்திப்பதற்காக தம்பதியரும், குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு, திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சென்னைக்கு புறப்பட்டனர்.
பயணத்தின் போது, ரெயில் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் நின்ற சில நிமிடங்களில், ரோகிணி கழிவறைக்கு சென்று முகத்தை கழுவிக் கொண்டிருந்தார்.
ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் ரோகினி இருக்கைக்குத் திரும்பவில்லை. இதனால், கணவர் ராஜேஷ் பல்வேறு பெட்டிகளில் அவரை தேடியும், எங்கும் காணவில்லை. ரெயில் காட்பாடியை நெருங்கிய நிலையில், சந்தேகமடைந்த ராஜேஷ் உடனடியாக ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
அதன்படி, ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார் தீவிரமாக தேடுதல் நடத்தினர்.
இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் அருகே, தண்டவாளத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடை மற்றும் அடையாளங்களை வைத்து சடலமாக கிடந்தவர் ரோகிணி என்பதையும், ரெயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்திருப்பதையும் உறுதிப்படுத்தினர்.
மேலும், அப்பகுதி சாட்சிகளின் கூற்றுப்படி, ரோகிணி தவறி விழுந்த பின்னர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்லும் எண்ணத்துடன் சிரமமாக நடந்து சென்றதாகவும், உதவியளிக்க யாரும் இல்லாத காரணத்தால் தண்டவாளத்தில் சென்று விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ரோகிணியின் குடும்பத்தினரிடமும், அவரை நேசித்த அனைவரிடமும் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.