இளம் பெண்ணை கொலை செய்து உடல் பாகங்களை 5 இடங்களில் வீசியுள்ளனர், தலையை தேடும் பணி தீவிரம். !

கர்நாடகா

இளம் பெண்ணை கொலை செய்து உடல் பாகங்களை 5 இடங்களில் வீசியுள்ளனர், தலையை தேடும் பணி தீவிரம். !

இளம்பெண் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் 5 வெவ்வேறு இடங்களில் தனித்தனியே வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டத்தில் ஒரு கோவில் அருகே காலை 8 மணிக்கு கேட்பாரற்றுக் கிடந்த பாலிதீன் பை இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பையில் மனிதர் ஒருவரின் கைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கோவிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மற்றொரு பையில் மற்றொரு கையும், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 3வது பையில் 2 கால்கள் உட்பட இதயம், குடல், வயிறு உட்பட மனித உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

3 கி.மீ. சுற்றளவில் 5 இடங்களில் இருந்து இந்த மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர். தலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. போலீசார் தலையை மட்டும் தேடி வருகின்றனர். கிடைத்த உடல் பாகங்களை வைத்து ஆய்வு செய்ததிலும், கையில் இருந்த டாட்டூ மூலமும், உயிரிழந்தவர் பெண்ணாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேறு ஏதோ ஓரிடத்தில் பெண்ணைக் கொலை செய்து, அவரின் உடல் பாகங்களைத் துண்டுதுண்டாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மீட்கப்பட்ட உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் காணாமல் போன பெண்கள் குறித்த புகார்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.