இந்தியா ரஷ்யா இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் டிரம்பிற்கு பதிலடி. !
இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, நெருங்கிய நட்பு நாடாக செயல்படுவது உள்ளிட்டவற்றால் கோபமான டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார்.
மேலும் நம் நாட்டின் பொருளாதாரம் செத்துப்போய்விட்டது என்றும், ரஷ்யா பொருளாதாரத்துடன் சேர்த்து ஒன்றாக மண்ணில் புதைக்கட்டும் என்று திமிராக பேசினார். இந்நிலையில் தான் ரஷ்யா உறவை கைவிட முடியாது எனக்கூறி மத்திய வெளியுறவுத்துறை டிரம்பின் மூக்கை அறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த வரி விதிப்புக்கு முக்கிய காரணம் ரஷ்யாவும், நம் நாட்டுக்கும் இடையேயான நட்பு மற்றும் வர்த்தகம் தான். உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவை தனித்து விட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
மேலும் அமெரிக்காவை ஒப்பிடும்போது ரஷ்யாவுடன் அதிக வர்த்தகத்தை நம் நாடு செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகமான தளவாடங்களை நம்நாடு வாங்குகிறது. அதேபோல் அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யும் நம் நாடு, அமெரிக்காவிடம் இருந்து குறைந்த அளவில் தான் இறக்குமதி செய்கிறது. இதனை டிரம்பால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இதனால் தான் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை அவர் விதித்துள்ளார். மேலும் கோபமான டிரம்ப் நம் நாட்டின் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று ஆணவமாக பேசியிருந்தார். இதுபற்றி அவர், ''இந்தியா ரஷ்யாவுடன் சேர்ந்து என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இருநாடுகளும் தங்களின் செத்துப்போன பொருளாதாரத்தை ஒன்றாக மண்ணில் புதைக்கட்டும். அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவில் தான் வர்த்தகம் செய்துள்ளோம். மாறாக இந்தியாவின் வரிகள் உலகிலேயே அதிகமாக உள்ளன. அதேபோல், ரஷ்யாவும் அமெரிக்காவும் வர்த்தகத்தையும் செய்யவில்லை'' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரஷ்யாவுடனான உறவால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத வரி, டிரம்பின் இந்த ஆணவப்பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
''பல்வேறு நாடுகளின் உறவு என்பது ஒவ்வொரு நாடுகளின் சொந்த நலன்களின் அடிப்படையில் தான் உள்ளது. இதனை மூன்றாவது நாடு கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு நிலையானது. காலத்தால் பரிசோதிக்கப்பட்ட கூட்டணியாக இது உள்ளது'' என்றார். இதன்மூலம் அமெரிக்கா என்னதான் முயன்றாலும் இந்தியா - ரஷ்யா இடையே விரிசலை ஏற்படுத்த முடியாது என்பதை மத்திய வெளியறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
