வடக்கே வன்னியர்.. கொங்கு கவுண்டர்! அம்மா நினைவு நாளில் மிஸ்ஸான புள்ளிகள்! ஏதோ பெருசா நடக்கப் போகுது பொதுக் குழுவில்?
அதிமுக
சென்னை: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சீனியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக நாமக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவை விட்டு விலகலாம் என சொல்லப்படுகிறது. அதிமுக தீர்மான குழுவில் அவர் இடம் பெறாத நிலையில் அவர், எடப்பாடி பங்கேற்ற ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதேபோல அமைச்சர் சிவி சண்முகமும் தனது தனிப்பட்ட ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது அதிமுகவில் பேசு பொருளாகியுள்ளது. டிசம்பர் 10ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவில் பெரிதாக ஏதோ ஒரு விவகாரம் நடக்கப்போவதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுக பொதுக்குழு டிசம்பர் 10 நடைபெற உள்ளது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்கள் வழக்கமாக தீர்மானங்களுடன் முடிவடையும். ஆனால் இந்த முறை நிலைமை மாறுபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் உருவாகியுள்ள அதிருப்திகள் காரணமாக, "இந்த கூட்டத்தில் ஏதேனும் 'கலகம்' உருவாகுமா?" என்பது அதிமுக வட்டாரங்களில் பெரிய கேள்வியாக உள்ளது.
கடந்த டிசம்பர் 6 ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், சிவி சண்முகமும் தங்கமணியும் எடப்பாடியுடன் சேராமல், தனித்தனியாக மரியாதை செலுத்தியிருப்பது இந்த சந்தேகத்தை மேலும் கூட்டியுள்ளது.
அதிமுக கலகம்
குறிப்பாக சிவி சண்முகம் வன்னியர் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மட்டும் சென்று மரியாதை செலுத்தியது, அவருக்கும் தற்போதைய தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என்கின்றனர். மூத்த அதிமுக தலைவர்களின் சொன்ன தகவல்படி, வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று சிலர் பலமுறை பரிந்துரைத்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த பின்னணியில்தான் சிவி சண்முகம், தங்கமணி போன்றோர் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி தலைமை
இதற்கிடையில், திமுகவுக்கு எதிராக அதிமுக அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கட்சிக்குள் குரல் கொடுக்கும் தலைவர்களும் அதிகரித்துள்ளனர். அவர்கள் சிலர் பொதுக்குழுவில் நேரடியாக, வெளியேற்றப்பட்டவர்களை சேர்க்காமல் இவ்வாறே சென்றால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், எடப்பாடியின் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது. வெளியேற்றப்பட்டவர்களை எந்த சூழலிலும் மீண்டும் சேர்க்கக் கூடாது என்பது அவர் எடுத்த முடிவு.
டெல்லி பாஜக தலையீடு
இது கட்சிக்குள் சிலருக்கு ஏற்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமையே பொதுக்குழுவில் பதட்டத்தை அதிகரிக்கிறது. மறுபுறம், பாஜக மற்றும் டெல்லி தலையீடு பற்றிய தகவல்களும் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ், தனது அணியிடம், தமிழகத்தில் நடப்பது அனைத்தும் டெல்லிக்கு தெரியும். தினகரனை தூண்டுவது அண்ணாமலையென்பதும் அறிந்ததே என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அதிமுக ஒன்று சேராவிட்டால் திமுகக்கு தான் பலன் என்பது பாஜக மேலிடத்திற்கும் புரிந்த ஒன்று என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
திமுக சீனியர் அதிருப்தி
இதனைத்தொடர்ந்து, புதிய கட்சி தொடங்க வேண்டாம், டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிவை பார்த்த பிறகு அடுத்த நடவடிக்கையை எடுங்கள் என்ற ஆலோசனையை ஓபிஎஸ் அணிக்கு அமித்ஷா அளித்துள்ளதாகவும், சொல்லப்படுகிறது. இத்தனை அரசியல் சூழ்நிலைகளும் சேர்ந்து, வரவிருக்கும் பொதுக்குழுவை மிகவும் முக்கியமான ஒன்றாக மாற்றியுள்ளது. எடப்பாடி தலைமையின் மீது மூத்த தலைவர்கள் கொண்டிருக்கும் அதிருப்தி, வெளியேற்றப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதில் எழுந்துள்ள மோதல், பாஜக மேலிடத்தின் நிலை, ஓபிஎஸ் நகர்வு - இவை அனைத்தும் ஒரே நேரத்தில் இணைந்து, டிசம்பர் 10 கூட்டத்தை அதிமுக எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாளாக மாற்றியுள்ளது. இந்த கூட்டம் அமைதியாக முடிவடையுமா? அல்லது நீண்டநாளாக ஒளிந்து கிடந்த கலகம் வெடித்துக் கிளம்புமா? என்பது இன்னும் நாட்களில் தெரிந்து விடும்.
